இங்கிலாந்தில் நடக்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட அணியை ஏப்ரல் 18 அன்று அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த பட்டியலில் முகமது அமீர் சேர்க்கப்படவில்லை. இது எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். 2017 ஐசிசி சேம்பியன் டிராபிக்கு பிறகு முகமது அமீர் விளையாடிய போட்டிகளில் மிகவும் தடுமாறினார். சேம்பியன் டிராபிக்குப் பிறகு பாகிஸ்தான் விளையாடிய 14 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே முகமது அமீர் வீழ்த்தியுள்ளார். அத்துடன் இவர் தற்போது ஃபிட்னஸிலும் பின்தங்கி உள்ளார். அடுத்த மாதத்தில் பாகிஸ்தான் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அணியில் முகமது அமீர் மற்றும் ஆஸீப் அலி 17 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முகமது அமீருக்கு பதிலாக இளம் வீரர் முகமது ஹஸ்னாய்ன் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வருட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முகமது ஹஸ்னாய்னின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற அபித் அலி-யும் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அபித் அலி தனது தொடக்க போட்டியிலேயே சதம் விளாசினார். 2017 ஆஸ்திரேலிய தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் ஓடிஐ அணிக்கு திரும்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உமர் அகமல் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.
மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள சஃப்ரஸ் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் சர்சையில் சிக்கிய சஃப்ரஸ் கான் அதன் பிறகு எந்தவொரு ஒருநாள் தொடரிலும் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. அனுபவ ஆல்-ரவுண்டர் முகமது ஹாபிஜ் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும் இவரது ஃபிட்னஸை பொறுத்தே ஆடும் XI-ல் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது தெரியும். இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய போது கட்டைவிரல் உடைந்தது. இதற்காக இரண்டு அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் அணியில் முகமது ஹாபிஜ் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது அறிவித்துள்ள அணி முதன்மை அணி எனவும் ஏப்ரல் 23 அன்று 15 பேர் கொண்ட பாகிஸ்தான் உலகக் கோப்பை அணி உறுதி செய்யப்படும் என பாகிஸ்தான் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி 2019 உலகக் கோப்பையில் மே 31 அன்று தனது முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
முழு அணி விவரம்
சஃப்ரஸ் கான் ( கேப்டன் & விக்கெட் கீப்பர் ), ஃபக்கர் ஜமான், இமாம்- உல்- ஹக், அபிட் அலி, பாபர் அஜாம், சோயிப் மாலிக், ஹாரிஸ் சோஹாய்ல், முகமது ஹபிஜ், ஷதாப் கான், இமாட் வாஷிம், ஹாசன் அலி, ஃபஹீம் அஸ்ரப், ஷாஹீன் அஃபிரிடி, ஜீனைட் கான், முகமது ஹஸ்னாய்ன்.