2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவுடனான அரசியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசியக்கோப்பை போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொது இடத்தில் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு விவரம் :
2018ஆம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியம் பெற்றது. இந்தியாவிற்கு வந்து விளையாட பாகிஸ்தான் அணி தயக்கம் காட்டியதால் இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த வருட ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பொது இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது. 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி வீரர்கள் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டதில் இருந்து எந்த ஒரு முக்கிய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடவில்லை. ஜிம்பாப்வே அணி மட்டும் சென்று ஒரு தொடரில் விளையாடிவிட்டு வந்தது. பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த முடியாத காரணத்தால் அந்த அணி ஐக்கிய அரபு அமீரகத்தயே சொந்த ஊராக பயன்படுத்தி வருகிறது
ஆசியக்கோப்பை 2020 :
ஆசியக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. அடுத்த மாதமே டி20 உலககோப்பை தொடங்குகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையி்ல், "பாகிஸ்தான் அணி ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தனது சொந்த ஊரான பாகிஸ்தானிலேயே நடத்த விரும்புகிறது, அது குறித்து இறுதி முடிவு மற்றவர்களிடம் கேட்டு அதற்கு பிறகு முடிவு செய்யப்படும்" என்று கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தாங்களே நடத்துவதாகவும் போட்டி நடக்கும் இடத்தை மற்ற அணிகளுடன் விவாதித்துவிட்டு அறிவிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறுகையில் மத்திய அரசு அனுமதி அளித்தால் இந்திய அணி எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்திய அணி சென்ற ஆசியக்கோப்பையை பொது இடத்தில் நடத்தியது போல பாகிஸ்தான் அணியும் பொது இடத்தில் தான் நடத்தி ஆக வேண்டும் என்று கூறினார்.
அடுத்தது என்ன :
பாகிஸ்தான் அணி ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பொது இடத்தில் நடத்தாவிட்டால் இந்திய அணி ஆசியக்கோப்பையில் பங்கேற்காது என்றே தோன்றுகிறது. இலங்கை அணியும் கண்டிப்பாக பாகிஸ்தானில் போட்டி நடைபெற்றால் விளையாடாது என்பதால் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக பொது இடத்தில் தான் நடத்தி ஆக வேண்டும். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டிகள் 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட்டது. அப்போது டி20 உலககோப்பை நடைபெற இருந்ததால் அப்படி நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு டி20 உலககோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் 2020 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை போட்டிகளும் 20 ஓவர் வடிவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.