2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது .
ஆசிய கிரிக்கெட் போட்டியானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அதன் உறுப்பு நாடுகளில் நடைபெறும். அதாவது உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியம் மூலமாக நடைபெறும்.
இதன் ஒரு பகுதியாக 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையைப் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. எனவே பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பெற்றது. சில அரசியல் காரணமாக போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தியது . இதில் போட்டியை நடத்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பொதுவாக ஆசிய கோப்பை போட்டிகள் ஒரு நாள் போட்டிகளாக நடைபெறும், ஆனால் 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசிய கோப்பை போட்டி டி20 பார்மேட்டில் நடைபெற உள்ளது, இதன் மூலமாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள உலக கோப்பை டி20 போட்டிகளில் ஆசிய அணிகள் சிறப்பாக விளையாட உதவிபுரியும்.
ஆசிய அணிகளான இந்தியா பாகிஸ்தான் இலங்கை தலா ஒரு முறை டி20 உலக கோப்பையை வென்றுள்ளன.
ஆசிய கோப்பை போட்டிகளை இந்தியா அணி அதிகபட்சமாக 6 முறை வென்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே 5 மற்றும் 2 முறை ஆசிய கோப்பை வென்றுள்ளன.
2020 ஆம் ஆண்டு ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது முறையாக டி20 பார்மாட்டில் நடைபெறவுள்ளது. வங்கதேசதில் 2016 ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் டி20 முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக நடந்த டி20 ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது.
இது குறித்து பேசிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஸ்முல் ஹசன் "2020ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் போட்டி எங்கு நடைபெறும் என்று விரைவில் அறிவிக்கும். 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை இந்திய அணி நடத்தியது ஆனால் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேஸில் நடந்தது" என தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு லாகூர் நகரில் இலங்கை நாட்டு கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச தொடர்களை அரபு நாடுகளில் நடத்திவருகிறது. இந்திய அணியும் 2012குக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை நிறுத்திக்கொண்டது.
சமீப காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் விளையடுவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் உலக 11 அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தொடரின் சில போட்டிகள் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.