தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவுற்றதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அதன்படி வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் 878 புள்ளிகளுடன், ஆஸ்திரேலியாவின் ‘பேட் கம்மின்ஸ்’ முதன்முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் கம்மின்ஸ் படைத்தார். இதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் ‘கிளென் மெக்ராத்’ ஆஸி தரப்பில் முதலிடம் பெற்று இருந்தார். கம்மின்ஸ் கடந்த இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுவரை முதலிடத்தை அலங்கரித்து வந்த தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ‘காகிசோ ரபாடா’ தனது முதலிடத்தை இழந்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்ததால் இவர் 2 இடங்கள் பின்னால் சரிந்துள்ளார். இங்கிலாந்தின் ‘ஜேம்ஸ் ஆண்டர்சன்’ மூன்றாவது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடர்கிறார்கள்.
பேட்ஸ்மென்களை பொறுத்தவரை இந்தியாவின் ‘விராட் கோலி’ 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், 3-வது இடத்தில் இந்தியாவின் ‘செதேஷ்வர் புஜாரா’வும் மாற்றமின்றி தொடர்கின்றனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அசாத்திய இன்னிங்சை விளையாடி தென் ஆப்பிரிக்காவை கதிகலங்க வைத்த இலங்கை பேட்ஸ்மேன் ‘குசல் பெரேரா’ பட்டியலில் கிடுகிடுவென உயர்ந்துள்ளார். இந்த போட்டிக்கு முன்பாக 98-வது இடத்தில் இருந்த பெரேரா, தற்போது 58 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ‘குவின்டன் டீ காக்’ முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்.
- விராட் கோலி - 922 புள்ளிகள்
- கேன் வில்லியம்சன் - 897 புள்ளிகள்
- செதேஷ்வர் புஜாரா - 881 புள்ளிகள்
- ஸ்டீவ் ஸ்மித் - 857 புள்ளிகள்
- ஹென்ரி நிக்கோலஸ் - 763 புள்ளிகள்
- ஜோ ரூட் - 763 புள்ளிகள்
- டேவிட் வார்னர் - 756 புள்ளிகள்
- குவின்டன் டீ காக் - 710 புள்ளிகள்
- அய்டன் மார்க்ரம் - 710 புள்ளிகள்
- திமுத் கருணரத்னே - 688 புள்ளிகள்
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்.
- பேட் கம்மின்ஸ் - 878 புள்ளிகள்
- ஜேம்ஸ் ஆண்டர்சன் - 862 புள்ளிகள்
- காகிசோ ரபாடா - 849 புள்ளிகள்
- ஃபில்லான்தர் - 821 புள்ளிகள்
- ரவீந்திர ஜடேஜா - 794 புள்ளிகள்
- டிரெண்ட் போல்ட் - 771 புள்ளிகள்
- முகமது அப்பாஸ் - 770 புள்ளிகள்
- ஜேசன் ஹோல்டர் - 770 புள்ளிகள்
- டிம் சவுதி - 767 புள்ளிகள்
- ரவி அஸ்வின் - 763 புள்ளிகள்.