ஆஸ்திரேலிய முன்னால் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் கடந்த 2014 நவம்பர் 25-ல் சிட்னியில் நடந்த ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சரை அடித்து ஆட முற்பட்டார். அப்போது அவருடைய கணிப்பு தப்பவே, பந்து அவருடைய இடது கழுத்துப் பகுதியில் பலமாகத் தாக்கியது. நிலைகுலைந்த பில் ஹியூஸ் மைதானத்தில் சரிந்தார்.
உடனடியாக செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹியூஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.
பில் ஹியூஸ் மரணமடைந்ததை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மருத்துவர் பீட்டர் புரூக்னர் உறுதி செய்தார். அப்போது பேசிய அவர், "சிறிது நேரத்துக்கு முன்னதாக பிலிப் ஹியூஸ் மரணமடைந்துவிட்டார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். பந்து தாக்கியபோது காயம் அடைந்து மயங்கி விழுந்த அவருக்கு கடைசி வரை நினைவு திரும்பவில்லை. உயிர் பிரிந்தபோது அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவி னர்கள் அவரை சூழ்ந்திருந்தனர். உயிர் பிரியும்போது கூட அவர் வலியை உணரவில்லை" என்றார்.
ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிலிப் ஹியுஸ். 26 டெஸ்ட் (1535 ரன்), 25 ஒரு நாள் (826), ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ (6) போட்டியில் விளையாடி உள்ளார்.
"பிலிப் ஹியூஸின் மரணம் ஈடுசெய்ய முடியாததாகும். அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கிரிக்கெட் சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கி றோம். இந்தத் தருணத்தில் ஹியூஸ் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு அனைத்து வீரர்களும் மதிப்பளிக்க வேண்டும்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் கதறியழுத காட்சி மிகவும் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள்கள் மட்டுமின்றி உலகின் ஒட்டு மொத்த ரசிகர்களும் வேதனையில் மூழ்கினர்.
இதனிடையே பந்து வீசிய அபார்ட் "நான் வீசிய பந்து ஒருவரின் உயிரை எடுத்துவிட்டதே" என கண்ணீர் சிந்தினார்.
பின் 2016-ம் ஆண்டு இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்ற அதிகாரி மைக்கேல் பார்ன்ஸ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். பிலிப் ஹியுஸ், ‘பவுன்சர்’ பந்தை தவறாக கணித்துள்ளார். இதனால், எதிர்பாராத விதத்தில் இவரின் கழுத்தில் பந்து தாக்கியது. இதுதான் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பந்துவீச்சாளர் எவ்வித உள்நோக்கத்துடனும் பவுலிங் செய்யவில்லை. மற்றபடி, மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை. இவர் நவீன ‘ஹெல்மெட்’ அணிந்திருந்தாலும், இறப்பிலிருந்து காப்பாற்றி இருக்க முடியாது. இவ்வகையான ‘ஹெல்மெட்டில்’ கழுத்துப்பகுதியை பாதுகாக்கும் அளவுக்கு வடிவமைக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘போட்டியின்போது தங்களது மகனிடம் சில வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருக்கலாம். இதனால், உணர்ச்சிவசப்பட்ட ஹியுஸ் பந்தை ஆக்ரோஷமாக எதிர் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது," என இவரது பெற்றோர் விசாரணையில் தெரிவித்து இருந்தனர்.
இதனை மறுத்த விசாரணை அதிகாரி மைக்கேல் பார்ன்ஸ் தனது அறிக்கையில், "ஹியுஸ் மரணத்திற்கு வீரர்களுக்கு இடையிலான வார்த்தை போர் காரணம் இல்லை. அதே நேரம், அழகான கிரிக்கெட் போட்டியில் இம்மாதிரியான மோசமான செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது," என தெரிவித்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறுகையில், "கிரிக்கெட்டில் வார்த்தை போரில் ஈடுபடுவது பெரிய பிரச்னையாக எழ வாய்ப்பில்லை. எல்லை மீறும்போது, இதை தடுத்து நிறுத்துவது அம்பயரின் கடமை,’’ என்றார்.
‘பவுன்சர்’ விதி மாறுமா கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் ஜேம்ஸ் சந்தர்லாந்து கூறுகையில், "ஹியுஸ் மரணத்தை விசாரித்த பார்ன்ஸ், ‘பவுன்சர்’ குறித்து சில பரிந்துரைகளை செய்துள்ளார். இதை நிச்சயமாக பரிசீலனை செய்வோம். ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில், பவுலிங் விதிமுறைகள் குறித்து மீண்டும் விவாதிப்போம்," என்றார். இக்கோர சம்பவம் நடந்து 4ஆண்டுகள் கடந்து இருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருந்து எப்போதும் மறையாது.