வருடம் தோறும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் அது இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கும், பல அதிரடி வீரர்களுக்கும் பஞ்சம் இருக்காது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, பார்முக்கு திரும்பி, தன் தாய் நாட்டிற்கு விளையாடும் வாய்ப்பை பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர்.
இவ்வாறு கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் தற்போது இந்திய அணியில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1. கே எல் ராஹுல்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ராகுல். இவர் வளர்ந்து வரும் திறமையான இளம் வீரர்களில் ஒருவர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் இவருக்கு மிகச் சிறப்பானதாக அமைந்தது. பஞ்சாப் அணியின் நட்சத்திர நாயகனாக திகழ்ந்தார் லோகேஷ் ராகுல். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் தனி ஒருவராக கடைசிவரை போராடி பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 659 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 54.91 ஆகும். எனவே இவர் சிறப்பாக விளையாடியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பை இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
#2. அம்பதி ராயுடு
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய அம்பத்தி ராயுடு. இவர் 2017 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதன் பின்பு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை அணியில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவருக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திய அம்பத்தி ராயுடு, அனைத்து போட்டிகளிலும் தனது சிறப்பான விளையாட்டை நிரூபித்தார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் மொத்தம் 602 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போது இந்திய அணியில், நான்காவது பேட்டிங் வரிசையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
#3. ரிஷப் பண்ட்
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட். திறமையான பல இளம் வீரர்களில் இவரும் ஒருவர். இந்த இளம் வயதிலேயே பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 684 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போது இந்திய அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் ரிஷப் பண்ட்.