நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியுற்றதை அடுத்து இந்திய அணியின் நடப்பு தொடரில் முதல் தோல்வியாக அமைந்தது. இதன் மூலம், இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய அணியின் செயல்பாடுகள் சற்று போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்புகளாக கேப்டன் விராத் கோலி மற்றும் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் செயல்படுகின்றனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்கும் ஓரளவுக்கு எடுபட்டு வருகிறது. ஆனால், இதுவரை எதிர்பார்த்திராத அளவில் இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பட்டு வருகிறது. நேற்றைய போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு கையே ஓங்கி உள்ளதை நாம் கண்டுள்ளோம். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து களமிறங்கி வரும் முகமது சமி தனது அனுபவத்தை கையாண்டு மூன்று முறை தொடர்ச்சியாக நான்கு மற்றும் அதற்கு மேலும் விக்கெட்களை கைப்பற்றி என மொத்தம் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி வெற்றி பெற்ற ஐந்தில் நான்கு ஆட்டங்கள் இவர்களின் பந்துவீச்சால் என்றும் கூறலாம்.
இந்த வெற்றிகளுக்குப் பின், மகேந்திர சிங் தோனியின் அனுபவமும் ஓரளவுக்கு ஒத்துழைத்து வருகிறது. கடந்த 15 வருடங்களாக இந்திய அணியின் முதுகுத் தூணாக விளங்கும் தோனி, இந்த உலகக் கோப்பை தொடரோடு ஓய்வு பெற உள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவர் மட்டுமல்லாது, அணியின் மூத்த வீரர்களான ஷிகர் தவான் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருக்கும் இம்முறைதான் அவர்களது கடைசி உலகக் கோப்பை தொடராகும். அதன்பின்னர், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய இளம் வீரர்களை கண்டெடுத்து போதிய வாய்ப்புகளை அளித்து 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கச் செய்ய உள்ளது. எனவே, அவ்வாறு இந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இனி இடம்பெறப்போகும் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.கலீல் அஹமது:
ஜாகிர் கான், இர்பான் பதான் முதல் ஆஷிஷ் நெஹ்ரா வரை பல்வேறு இடக்கை பந்துவீச்சாளர்கள் இந்திய கிரிக்கெட்டில் ஜொலித்துள்ளனர். இவர்களின் அபார பந்துவீச்சு வலதுகை பேட்ஸ்மேன்களை பலமுறை பதம் பார்த்துள்ளது. இதன் மூலம், இவர்கள் அனைவரும் மிக எளிதில் விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளனர். 2019 உலகக்கோப்பை தொடரில் கூட இந்த இடத்தை பந்துவீச்சாளர்களின் தாக்கம் சற்று அதிகம் தான். உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், ஜாசன் பெஹன்டிராஃப் மற்றும் பாகிஸ்தானின் முகமது ஆமீர், சாஹின் அஃப்ரிடி மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த டிரென்ட் போல்ட் ஆகியோரும் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர்களாக திகழ்கின்றனர். தற்போது இந்திய அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், ஒரு இடதுகை பந்துவீச்சாளர் கூட இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை அமைந்துள்ளது. எனவே, விராட் கோலி இனி வரும் காலங்களில் இதனை மாற்றி அமைக்க முற்படுவார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வெறும் 9 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 19 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்த இளம் வீரரை கொண்டு அத்தகைய இடத்தை நிரப்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் இவரது ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் தேவைப்படுகிறது. புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசும் இவர், ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் குறிப்பாக மிதவேக பந்து வீச்சில் ஈடுபட்டு எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவராக திகழ்கிறார். ஒருவேளை இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பாடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#2.சுப்மான் கில்:
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார், இந்த இளம் வீரர். மேலும், இவரை "தொடர் நாயகன்" விருதை வென்றும் அசத்தியுள்ளார். 20 வயதான இவர், இனி சர்வதேச போட்டிகளிலும் இடம்பெற்று தமது பங்களிப்பை அளிக்க உள்ளார். உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ள இவர், கடந்த 9 இன்னிங்சில் 706 ரன்களை குவித்து 108 என்ற பேட்டிங் சராசரி உடன் இந்திய அணியின் தேர்வாளர்களை சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு முன்னர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும் இவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதன் பின்னர் நடைபெற்ற 12வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி "தொடரின் வளர்ந்து வரும் வீரர்" என்னும் விருதை வென்றார். 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் ஷிகர் தவானுக்கு 37 வயது நெருங்கிவிடும். எனவே, இந்திய அணிக்கு புதிதாக ஒரு தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படும் நிலையில், இவர் ஷிகர் தவானுக்கு மாற்றாக அமைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டால் தனது தொடர்ச்சியான பேட்டிங் பங்களிப்பினை அளித்து தொடர்ந்து பல போட்டிகளில் இடம் பெறுவார் எனவும் நம்பலாம். எனவே, இனிவரும் ஆண்டுகளில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மெருகேற்றினால் அடுத்த உலக கோப்பை தொடரில் இவர் நிச்சயம் பங்கு பெறுவார்.
#1.ரிஷப் பண்ட்:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இடம் பெற்றதில் இருந்து இந்திய அணி ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார், ரிஷப் பண்ட். பல முறை இவர் மகேந்திர சிங் தோனியோடு ஒப்பிடப்பட்டு உள்ளார். நிச்சயம் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பின்னர், இவர் தான் இந்திய அணியில் நிலைத்து நிற்பார் எனவும் குரல்கள் வலுத்து வருகின்றன. விக்கெட் கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், ஆட்டத்தின் இறுதிகட்ட நேரங்களில் தனது பேட்டிங்கால் எதிர் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். அதுமட்டுமல்லாது, இந்திய அணிக்கு முதல் பவர் பிளேயிலிருந்து அதிக ரன்களை குவிக்க அதிரடி தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படுகிறது. இடது கை பேட்ஸ்மேனான இவர், அத்தகைய பணியை மேற்கொள்வார் எனவும் நம்பப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடினால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணிக்காக இடம் பெற்று சிறந்த டி20 பேட்ஸ்மேனாக கைதேர்ந்த இவர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 488 ரன்களைக் குவித்து தனது ஸ்ட்ரைக் ரேட் 160க்கும் மேல் வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற அணிக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடி 32 ரன்களை குவித்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். இருப்பினும், இனி வரும் ஆட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதன் மூலம், உலகக் கோப்பை தொடர பின்னர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பிடித்து அடுத்தடுத்து வரும் தொடர்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றால் நிச்சயம் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரிலும் ரிஷப் பண்ட் இடம் பெறுவார்.