சமீபகாலமாக கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவர்கள் தவறான முடிவுகளை அளிப்பது அதிகரித்துவிட்டது. சரியான முடிவுகளை அறிவிக்க கள நடுவர்களுக்கு உதவியாக இருப்பவர் தான் மூன்றாவது நடுவர் எனப்படும் ‘தேர்டு அம்பயர்’. ஆனால் சமீபகாலமாக தெளிவான தொழில்நுட்பங்கள் இருந்தும் மூன்றாவது நடுவரே தவறு செய்வதும் அதிகரித்துவிட்டது. இது போன்ற அம்பயரிங் தவறுகள் இன்று தொடங்கிய தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அரங்கேறியது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் தென்னாப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ‘டீன் எல்கர்’ டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ‘ஹாஷிம் ஆம்லா’ களமிறங்கினார். அதன் பின்னரே சர்ச்சையும் களமிறங்கியது.
ஆரம்பத்திலேயே ‘ஆம்லா’வுக்கு இலங்கை வீரர்கள் பலத்த ஒரு எல்.பி.டபிள்யூ முறையீட்டை எழுப்பினர். ஆனால் கள நடுவர் அவுட் கொடுக்க மறுக்கவே, இலங்கை அணி வீரர்கள் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாமா என ஆலோசித்து முடிவில் இலங்கை கேப்டன் ‘கருணரத்னே’ டிஆர்எஸ் முறைப்படி அப்பீல் செய்தார். ஆனால், கொடுக்கப்பட்ட 15 வினாடிகள் கால அவகாசம் முடிந்து விட்டது எனக்கூறி கள நடுவர் அவர்களின் அப்பீலை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் ரீப்ளேயில் பார்க்கும்போது 13 வினாடிகள் மட்டுமே முடிந்திருந்தது தெரியவந்தது.
இந்தக் கண்டத்தில் இருந்து தப்பிய ‘ஆம்லா’வுக்கு இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் அபாரமாக எட்ஜ் எடுக்க வைக்க அதை ‘குசால் மென்டிஸ்’ திறமையாக கேட்ச் பிடித்தார். ஆனால் பந்து தரையோடு சேர்த்து பிடிக்கப்பட்டது போல் தெரிந்ததால் ஆம்லா களத்தை விட்டு நகரவில்லை. உடனே கள நடுவரான ‘ரிச்சர்ட் காடில்ப்ரோ’ மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.
ஆனால் கள நடுவர் ‘ரிச்சர்ட் காடில்ப்ரோ’ தனது சாஃப்ட் சிக்னலாக ‘நாட் அவுட்’ சைகையை காண்பித்தார். ஆனால் ரீப்ளேயில் கேட்ச் சரியாக பிடிக்கப்படுவது தெளிவாக தெரிந்தது. கள நடுவரின் சாஃப்ட் சிக்னல் நாட் அவுட் என்பதால் மூன்றாவது நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மூன்றாவது நடுவரான இயன் கோல்ட் ‘அவுட்’ எனத் தீர்ப்பளித்தார். ஆம்லாவின் இந்த சர்ச்சைக்குரிய இன்னிங்ஸ் 3 ரன்களில் முடிவுக்கு வந்தது.
கடந்த நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரிலும் இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக கடைசி டி-20 போட்டியில் ‘டிம் செய்ஃபர்ட்’க்கு தோனி செய்த அதிவேக ஸ்டம்ப்பிங் சர்ச்சையானது. நியூசிலாந்து அணி தரப்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) தற்போது அந்த சர்ச்சைக்குரிய முடிவுகளை ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் நடுவர்கள் தங்கள் தவறுகளை குறைத்துக் கொள்ள இது உதவும் என ‘ஐசிசி’ தரப்பில் கூறப்பட்டுள்ளது.