மீண்டு வர வாய்ப்புள்ள மறக்கப்பட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்!

இர்பான் பதான்
இர்பான் பதான்

ஐபிஎல் ஏலம் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் சற்று முன்னதாகவே நடக்கப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடைபெறுவதால் ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்திலேயே நடக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கப்பெறுவதால் ஐபிஎல் போட்டிகள் தென்னாபிரிக்கா இல்லையெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கப்பெறலாம் என்று கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஏலத்தில் 70 இடங்களுக்கு சுமார் 346 வீரர்கள் போட்டியிடுகின்றனர். ஐபிஎல் அணிகள் யாரை எடுப்பது என்று பல வியூகங்களை வகுத்துவருகின்றனர்.

ஐபிஎல் 2019 சீசனில் பல மறக்கப்பட்ட வீரர்கள் மீண்டு வர வாய்ப்புள்ளது. சில பிரபலமான வீரர்கள் கடந்த காலங்களின் ஏலத்தில் பங்கேற்க முடியாமல் போயிருந்தாலும் இந்த வருட இறுதி ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஐபிஎல் 2019 தொடரில் மீண்டு வர வாய்ப்புள்ள 5 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

(இத்தொகுப்பானது கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் வீரர்களின் அடிப்படையில் அமைந்துள்ளது)

#1. வருண் ஆரோன்

வருண் ஆரோன்
வருண் ஆரோன்

இந்தியா களம் கண்ட, அதித வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். வருண் ஆரோன் கடைசியாக 2015-ஆம் ஆண்டு நடந்த சர்வேதேச போட்டியில் இந்தியா அணிக்காக களம் கண்டிருந்தார். ஐபிஎல் போட்டிகளில் 2017-ஆம் ஆண்டு களம் கண்டிருந்தார். தனது 21 வயதில் இந்திய அணியில் களம் கண்டிருந்த இவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய காரணத்தாலும் காயம் காரணமாகவும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

சிறந்த ஆட்டத்திறனை வருண் பெற்றிருந்தாலும் சர்வேதேச போட்டிகளில் தனது திறத்தை வெளிப்படுத்த தவறியிருந்தார் வருண். இந்தியாவிற்காக 9 ஒருநாள் போட்டிகளிலும் 9 டெஸ்ட் போட்டிகளிலும் களம் கண்டுள்ளார் வருண்.

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இவர் களம் கண்டிருந்த ஆறு ஐபிஎல் சீசன்களில், 42 போட்டிகளில் வெறும் 38 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் நான்கு வெவ்வேறு அணிகளுக்கு ஆடியுள்ள வருண், எந்த ஒரு அணியிலும் தனது நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி இருந்தார். இதன் காரணமாகவே 2018-க்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

கடந்த சில மாதங்களாக வருண், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2018/2019 விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்டிற்காக 18 விக்கெட்களை சாய்த்துள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சி தொடரிலும் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 2 இன்னிங்சில் ஐந்து விக்கெட்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#2. பர்வேஸ் ரஸூல்

பர்வேஸ் ரஸூல்
பர்வேஸ் ரஸூல்

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறந்து பங்காற்றியதால் 2017 ஆம் ஆண்டு இந்தியா டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டு ஒரு போட்டியில் களம் கண்டிருந்தார் ரஸூல்.

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை 2016ம் ஆண்டு கடைசியாக களம் கண்டிருந்தார் ரஸூல். புனே வாரியர்ஸ் அணிக்காக முதன்முதலில் ஆடிய இவர், ஐபிஎல் தொடரில் வெறும் 11 போட்டிகளில் களம் கண்டிருக்கிறார். 2017 மற்றும் 2018 க்கான ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக நல்ல பர்ஃபார்மன்ஸை கொடுத்துவரும் ரஸூல், ரஞ்சி தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 473 ரன்களை எடுத்து 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பேட்டிங் சராசரி 47 ஆக உள்ளது. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார் ரஸூல்.

டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் காணப்படும் நிலையில், இந்த வருட ஏலத்தில் இவர் நல்ல விலைக்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#3. இர்பான் பதான்

இர்பான் பதான்
இர்பான் பதான்

இந்தியா களம் கண்டிருந்த சிறந்த ஆல்-ரவுண்டர்களில் முக்கியமான வீரராக கருதப்படுபவர் இர்பான் பதான். ஒரு காலகட்டத்தில் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார் பதான்.

2007 டி20 உலக கோப்பை வெற்றியில் மிக முக்கிய பங்காற்றியிருந்தார் பதான். இந்தியாவிற்காக 129 ஒருநாள் போட்டிகள், 29 டெஸ்ட் போட்டிகள், 24 டி20 போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் களம் கண்டு தனது பங்கினை நிலைநாட்டியிருந்தார் பதான்.

2012 -ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் பதான். அதன்பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பதான் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை 100க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்று 80 விக்கெட்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார் பதான்.

2017 ஐபிஎல் தொடரில் வெறும் ஒரு போட்டியில் களம் கண்டிருந்தார் பதான். 2018 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன்வராத காரணத்தினால் தனியார் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக களம் கண்டார் பதான்.

தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆடிய 6 போட்டிகளில் 317 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 40 ஆக உள்ளது. விக்கெட்டுகளை பொறுத்தவரை வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து இருந்தாலும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பதான்.

எனவே ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் தவித்து வரும் அணிகள், இவரை ஏலத்தில் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#4. டெல் ஸ்டெய்ன்

டெல ஸ்டெய்ன்
டெல ஸ்டெய்ன்

இந்த மனிதனுக்கு அறிமுகமே தேவையில்லை. ஒரு காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த பௌலராக விளங்கியவர் ஸ்டெய்ன். காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஸ்டெய்ன் சர்வதேச போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடர் தொடங்கின 2008-ஆம் ஆண்டிலிருந்தே ஸ்டெய்ன் ஐபிஎல் போட்டிகளில் அங்கம் வகித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக இவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக விலகி இருந்தார்.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போலவே இவரது கிரிக்கெட் வாழ்வும் முடிந்துவிட்டது என்று பலர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணிக்கு திரும்பிய ஸ்டெய்ன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றார் ஸ்டெய்ன். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 2018 மசான்ஸி லீக் தொடரிலும் ஆடி வருகிறார். அத்தொடரின் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் ஸ்டெய்ன். 8 போட்டிகளில் பதினோரு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது எகானமி 6.87 ஆக உள்ளது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டெய்னை, அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்க்கலாம்.

#5. ஜீவன் மெண்டிஸ்

ஜீவன் மெண்டிஸ்
ஜீவன் மெண்டிஸ்

காற்சுழல்வீச்சாளார்கள் டி20 போட்டிகளில் அதிக கவனம் ஈர்ப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பந்துவீச்சில் பல வேறுபாடுகளைக் கொண்டு செயல்படும் காற்சுழல்வீச்சாளார்களை அணிகள் அதிகம் நாடுகின்றனர்.

வேறுபாடுகளை கணித்து பேட்டிங் செய்வது பேட்ஸ்மேனுக்கு கடினமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அதன் காரணமாகவே காற்சுழல்வீச்சாளார்கள் டி20 போட்டிகளில் ஜொலிக்கின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த மெண்டிஸ், பல நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். 35 வயதுடைய இவர் கடந்த 2013-ஆம் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக மூன்று ஐபிஎல் போட்டிகளில் களம் கண்டிருந்தார். அதன் பின்பு எந்த ஒரு அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மாசான்சி டி20 தொடரில் ஷ்வேனே ஸ்பார்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், 8 போட்டிகளில் 16 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். அத்தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளை காரணம் காட்டி பல முண்ணனி வீரர்கள் தொடரின் பாதியிலேயே வெளியேறும் நிலை உள்ளது. எனவே இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் மும்முரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்து : சுஜித் மோகன்

மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்

App download animated image Get the free App now