2019 ஐபிஎல் சீசனின் ஏலம் இந்த மாதம் 18ம் தேதி ஜெய்ப்பூரில் துவங்க உள்ளது. இதுவரை ஏலத்தில் கலந்து கொள்வதற்காக 232 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 1003 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த ஏலத்தில் 8 அணியினர் பங்குபெறுகின்றனர். மொத்தம் 70 வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு தேர்வு செய்ய உள்ளனர். இந்த 12-வது ஐபிஎல் சீசனின் ஏலத்தை, வழக்கமாக தொகுத்து வழங்கிய ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக ஹக் எட்மேட்ஸ் தொகுத்து வழங்க உள்ளார். அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து 59 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் , ஹாங்காங், அமெரிக்கா, அயர்லாந்து, போன்ற நாடுகளிலிருந்தும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அடுத்த வருடம் நடைபெறும் உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்த ஆஸ்திரேலிய வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் போன்றோர் இந்த ஏலத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர். யுவராஜ் சிங், அக்சர் படேல், முகமது சமி போன்ற இந்திய வீரர்களுக்கு 1 கோடியை அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம். மேலும், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 9 சர்வதேச வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை தொகையை இரண்டு கோடியாக நிர்ணயம் செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் ஏலம் குறித்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் இந்திய வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் கடும் போட்டி நிலவக் கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவ்வாறு அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இங்கு காணலாம்.
3.ஜெய்தேவ் உனத்கட்:
2018-ம் ஆண்டு இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் ஜெய்தேவ் உனத்கட். தற்போது இவரின் அடிப்படை தொகையாக 1.5 கோடி உள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 11.5 கோடிக்கு ஏலம் போன உனத்கட், தன் திறனை சரியாக வெளிப்படுத்தாத காரணத்தினால் ராஜஸ்தான் அணியிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற 5 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ள இவர், 2017-ம் ஆண்டு புனே அணிக்காக விளையாடி 24 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார். கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், 15 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இதுவரை 62 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 8 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றி தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார், உனத்கட். இந்திய ஆடுகளங்களை கணித்து விளையாடக்கூடிய கைதேர்ந்த பந்துவீச்சாளரான இவர், இந்த சீசனில் நன்கு ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கூறியது போல இந்திய வீரர்களுக்கு ஏலத்தில் எப்போதும் பஞ்சம் இருக்கும் பட்சத்தில் இவர் இம்முறையும் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள வீரராக இருப்பார் என்பதில் மாற்று கருத்தில்லை.