இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் ஆஸி. அணியில் மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதிலாக ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெல்பர்னில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியிலும் அணியில் ஸ்டான்லேக் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக நாதன் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டிருந்தார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க் டி20 போட்டியில் விளையாடி ஏறக்குறைய 2ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டார்க் விளையாடினார். அதன்பிறகு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெறவில்லை.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தப்போவதாகச் சமீபத்தில் ஸ்டார்க் ஊடகங்களிடம் தெரிவித்த நிலையில் தற்போது டி20 அணியில் இடம் பெற்றுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைக்கப்பட்டது குறித்து கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும்போது "டி20 போட்டி, ஒருநாள் போட்டியில் அதிகமான அனுபவம் உடையவர் ஸ்டார்க். டி20 போட்டியில் எதிரணியினருக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசும் திறமையுடைவர் ஸ்டார்க். சிட்னி ஆடுகளத்தை பார்த்தபின், ஆடுகளம் எப்படிப்பட்டது என்பதை அறிந்தபின் விளையாடும் 11பேர்கொண்ட அணியைத் தேர்வு செய்வோம். டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணிதீவிரமாகத் தயாராகி வருகிறது” எனத் தெரிவித்தார்.
சிட்னி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். ஏற்கெனவே ஜேஸன் பெஹ்ரன்டார்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கோல்டர் நைல் ஆகியோர் இருக்கும்போது, ஸ்டார்க் இணைந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
இந்தியா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் முதலாவது போட்டியை காட்டிலும் நேற்றைய போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டனர். புவனேஷ்குமார் மற்றும் கலில் அஹமது தலா இரண்டு விக்கெட்டும் பும்ரா,குல்தீப்யாதவ் மற்றும் க்ருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
எனினும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இரு போட்டியிலும் மழையின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 19ஓவரில் 7விக்கெட் இழப்பிற்க்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை வந்தது. அந்தநேரத்தில் அம்பையர் போட்டியை சிறிது நேரம் தொடர வைத்தார். இது இந்திய அணியின் கேப்டன் கோலியை கோபப்பட வைத்தது. அவர் அம்பையரிடம் ஏதோ கோபமாக கூறினார். பின்பு போட்டி நிறுத்தப்பட்டது.கோலியின் கோபம் நியாயமானது தான் என அப்போது வர்ணனையில் இருந்த மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். மழையில் பந்து வீசுவது மிகமிக கடினம்.சிட்னியில் நாளை நடைபெற உள்ள கடைசி டி20 போட்டியில் மழையின் தாக்கம் இருக்காது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்படாமல் முழுமையாக நடைபெற்று இருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்கலாம். ஏனென்றால் ஆஸ்திரேலியா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் பாதிக்கப்பட்டது. புவனேஸ்வர்குமாரும், பும்ராவும் நேர்த்தியுடன் பந்துவீசி கட்டுப்படுத்தி இருந்தனர்.
நாளைய ஆட்டமும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணி தொடரை இழந்துவிடும். கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியிலும் கோலி எந்தவித மாற்றமும் செய்யமாட்டார் என்றே தெரிகிறது.
முதல் போட்டியை போலவே சிட்னி ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு அணிகளும் நாளை மோதுவது 18-வது மோதலாகும். இதுவரை நடந்த 17 போட்டியில் இந்தியா 10-ல், ஆஸ்திரேலியா 6-ல் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால் நாளைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.