சமீபத்தில் முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 293-வது டெஸ்ட் வீரராக வியக்கதக்க சாதனைகளைப் புரிந்த இளம்வீரர் பிரத்வி ஷாவின் 19-வது பிறந்தநாள் 9.11.2018 அன்று கொண்டாடப்பட்டது. மிக இளம் வயதில் தன் அறிமுக போட்டியிலே சதம் கண்ட இளம்வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் பிரித்வி ஷா. இந்திய அணியில் ஷேவாக்கிற்கு பிறகு, ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பந்தை அடித்தாளும் திறன் உள்ளவர் பிரித்வி ஷா.
2018 இங்கிலாந்து தொடரில் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர் போட்டியில் களம் இறக்கப்படவில்லை. தனது முதல் டெஸ்டில் இவரது அபார கன்னி சதத்தாலும், இரண்டாவது டெஸ்டில் இவரது 70 ரன்கள் பங்களிப்பாலும் இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வென்றது. அதனால், இவரே அந்தத் தொடருக்கான 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார். இவரது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்விற்கு உறுதுணையாக முன்னாள் வீரர்களான டிராவிட், சுனில் கவாஸ்கர், ஷேவாக் போன்றோர் கிட்டத்தட்ட ₹36 லட்சங்களை அளித்து ஒரு ஒப்பந்தத்தில் கையேழுத்திட்டு கிரிக்கெட்டில் வளர உதவினர். மேலும், இவரது ஆக்ரோஷத்திற்கு காரணம் டிராவிட்டே என்று பெரும்பாலும் சொல்கின்றனர். காரணம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சியாளராக அவர் விளங்குவதாலே.
அறிமுக டெஸ்டில் மட்டுமல்லாது, ரஞ்சி மற்றும் துலீப் கோப்பை கிரிக்கெட் இரண்டிலும் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த பெருமை இவரையே சாரும். இதற்கு முன் இதே சாதனையை சச்சின் டெண்டுல்கர் செய்திருக்கிறார். இவரது தனிப்பெரும் சாதனையான 14 வயதில் ஹாரீஸ் ஷீல்ட் என்னும் கிரிக்கெட் போட்டியில் 546 ரன்களை 339 பந்துகளில் குவித்து கிரிக்கெட் உலகின் அனைவரது பார்வையையும் தனதாக்கினார். இதன்மூலம் சிறுவர்களுக்கான கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சாதனையைப் படைத்தார் பிரித்வி ஷா.
16 முதல்தர போட்டிகளில் களம் கண்டுள்ள பிரித்வி ஷா இதுவரை, 8 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 1655 ரன்களையும் கொண்டு ஒரு சிறந்த ஆவ்ரேஜான 61.29 என்று வைத்துள்ளார். 2016 - 17 ரஞ்சி டிராபியில் மும்பை அணி அரைஇறுதியில் இவர் அடித்த 120 ரன்கள் பலம் வாய்ந்த அஸ்வின் தலைமையிலான அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல காரணமாக இருந்தது.
இளம்வயதில் தாயை இழந்த பிரித்வி ஷாவிற்கு அனைத்தும் தந்தையே. அவரே பிரித்வி ஷாவை தினமும் அகாடமிக்கு 3 மணிநேரம் செலவழித்து அழைத்துச்செல்வார். தன் மகன் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதிக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்றினார் பிரத்வி ஷா. இந்தாண்டு பிரித்வி ஷாவின் தலைமையில் தான் 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவர் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு டெல்லி அணிக்கு ஒப்பந்தம் ஆனார். இது இவரது அடிப்படை தொகையான இருபது லட்சத்தைவிட ஆறு மடங்கு அதிகமானது.
ஐபிஎல்-இல் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராகச் செயல்பட்டு ரன்களை அதிரடியாகக் குவித்து பந்துவீச்சாளர்களை மிரட்டினார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், பிரித்வி ஷாவிற்கு எம்.ஐ.ஜி கிரிக்கெட் கிளப்பில் சச்சின் பயிற்சி அளிக்கவுள்ளார். இனி பிரித்வி ஷாவின் ஆக்ரோசத்துடன் சச்சினின் கிளாசிக் ஷாட்களையும் எதிர்பார்க்கலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்துவித ஒருநாள், டி20 போட்டிகளிலும் விரைவில் இடம்பெற்றுப் பல்வேறு விதமான சாதனைகளைப் புரிய பிரித்வி ஷாவை வாழ்த்துகிறோம்.