அனேகமாக ப்ரித்வி ஷா பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்சில் களம் இறங்குவார் - ரவி சாஸ்திரி

ப்ரித்வி ஷா காயம்
ப்ரித்வி ஷா காயம்

பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா தனது இடது கணுக்காலை முறித்துக் கொண்டதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்ட ஷா எப்போது திரும்புவார் என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ப்ரித்வி ஷா மெல்போர்னில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திரும்புவார் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி சாஸ்திரி கூறியதாவது “ப்ரித்வி ஷா காயம் அடைந்ததைக் கண்டு மனம் உடைந்தது. அது ஒரு கெட்ட சகுணம். நல்ல விஷயம் என்னவென்றால் அவர் சீக்கிரமாக குணமடைந்து வருகிறார், தானே நடக்கவும் செய்கிறார். இந்த வார இறுதிக்குள் அவரை ஓடும் பயிற்சியில் ஈடுபடுத்த உள்ளோம். அனைத்தும் நன்றாக நடந்தால் அவரை விரைவில் களத்தில் காணலாம்” எனக் கூறினார்.

மேலும் அவர் “ஷாவிடம் இளமை உள்ளதால் அவர் குணமடைய நீண்ட காலம் ஆகாது” எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று தொடங்க உள்ளது இந்தியா, ஆஸ்திரேலியாவில் தனது அணி வீரர்கள் முழுவீச்சுடன் ஈடுபடுவார்கள் என்று கூறிய சாஸ்திரி “எந்த அணியும் தனது சொந்த மண்ணில் பலவீனமாக கருதமுடியாது, சொந்த மண்ணில் அணிகள் பலத்துடனும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவார்கள், இது கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் பொருந்தும். ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஆக்ரோஷமாக காணப்படுவார்கள், அவர்களை எதிர்கொள்வது சவாலாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும் தனது அணியை பற்றி சாஸ்திரி கூறியதாவது “நாங்கள் ஆட்டத்திறன் அனுபவம் என்று அனைத்திலும் சிறப்பாக இருக்கிறோம். பௌலிங் யூனிட்டும் நன்றாக அமைந்திருக்கின்றது, எனவே இத்தொடரானது இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும்.” என தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிய சாஸ்திரி “ஓரிரு செஷனில் மற்றும் நிலைத்து நின்றால் போதாது, ஆட்டத்தை வெகு தூரம் கொண்டு செல்ல வேண்டும். எனவே வீரர்கள் இதைப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் எதிரணிக்கு அழுத்தம் உண்டாகும்” என்று கூறினார்.

“டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால் ஓரிரு வீரர்கள் பங்களித்தால் மட்டும் போதாது, 6-7 வீரர்கள் தொடர்ச்சியாக பங்களிக்க வேண்டும், அவ்வாறு செய்தால்தான் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும்” என்று கூறினார் சாஸ்திரி.

கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் டெஸ்ட் தொடரை வெல்ல இந்த தொடர் வழிவகுக்கும் என்றே கூறலாம். ஏனெனில் பேட்டிங்கில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் சற்று வலுவடைந்து காணப்படுகிறது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை. தனது அதிவேக பந்துவீச்சை மட்டுமே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. ஸ்டார்க், ஹேசல் வுட், கம்மின்ஸ், சிட்டில் என்று வேகப்பந்து நட்சத்திர பட்டாளமே ஆஸ்திரேலியாவிடம் உள்ளது. போட்டிகளில் அனல் பறக்கும் வார்த்தை சண்டைகளும் எதிர்பார்க்கலாம். இவர்களை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளதா? பொறுத்திருந்து பார்ப்போம்.!

Quick Links