சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் புள்ளிவிபரங்களை எடுத்து பார்க்கும் போது, ஆஸ்திரேலியாவில் இருந்த வரை பெரும்பாலான சமயங்களில் பேட்டிங் க்ரீஸில் தான் நின்றுள்ளார் புஜாரா. அதாவது 1,867 நிமிடங்கள், சரியாக கூறினால் 36 மணி நேரம் களத்தில் நின்றுள்ளார் புஜாரா. டெஸ்ட் தொடரில் அவர் அடித்த 521 ரன்கள் மட்டும் பெரிதல்ல. அதற்காக அவர் சந்தித்த பந்துகள் எத்தனை தெரியுமா? 1,258.
டி20 காலத்தில் புஜாராவை போன்ற பேட்ஸ்மேனைப் பார்ப்பது அரிதான விஷயம். கோபத்தின் மூலமாக அல்லாமல் தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும், அணுகுமுறையாலும் எதிரணியை அடி பணிய வைக்கிறார் இவர். புஜாரா போன்று களத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் பிடிப்பதற்கு ஒருமித்த கவனமும் அதிகப்படியான தன்னம்பிகையும் அவசியமான ஒன்று. இதற்கு புஜாராவின் எளிமையான வாழ்க்கை முறையும் அவரது பெற்றோருமே காரணம்.
"ஒட்டுமொத்த உலகமும் புஜாராவை புகழ்வதோடு அவரின் ஒருமித்த கவனத்தையும் நிதானத்தையும் கண்டு ஆச்சர்யப்படுகிறது. ஆனால் ஒரு விஷயத்தை உங்களிடம் நான் கூறுகிறேன். நீங்கள் நினைப்பது போல் இதையெல்லாம் புஜாராவிற்கு நான் கற்றுக் கொடுக்கவில்லை. எனது மனைவி தான் (புஜாராவின் தாயார்) எல்லாம் கற்றுக் கொடுத்தது. ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேன் என்னவெல்லாம் கற்க வேண்டும் என்பதை மட்டும் தான் நான் சொல்லி கொடுத்தேன். ஆனால் ஒருமித்த கவனம், நிலையான மனம், எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருத்தல் போன்ற முக்கியமான விஷயங்களை தனது அம்மாவிடம் இருந்தே புஜாரா கற்றுக் கொண்டார்" என்கிறார் புஜாராவின் தந்தை அரவிந்த்.
சிட்னி டெஸ்டில் புஜாரா 193 ரன் எடுத்திருந்த போது 68 வயதான அரவிந்த இதய நோய் சிகிசைக்காக மருத்துவமணையில் அணுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தைப்பருவத்திலிருந்து தனது மகனுக்கு (புஜாரா) பயிற்சி அளித்து வரும் அரவிந்த, முதல் முறையாக இந்த தடவை தான் புஜாரா பேட்டிங் பிடிப்பதை பார்க்காமல் இருந்துள்ளார். "ஆமாம், முதல் தடவையாக என் மகனின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் போனது. ஆனால் அதன் பிறகு அந்த ஆட்டத்தை ஹைலைட்சில் பார்த்தேன். என்ன இருந்தாலும் நேரடியாக பார்த்தது போல் வராதே" என்கிறார்.
டெஸ்ட் போட்டியில் இந்தளவிற்கு வெற்றிகரமான பேட்ஸ்மேனாக புஜாரா ஜொலிப்பதற்கு ஒரே காரணம், அவரது அலைபாயாத கவனமே. பந்துவீச்சாளர் அவரை நோக்கி வசை பாடினாலும், இகழ்ந்து பேசினாலும் அவர் எதற்கும் பதிலளிப்பதில்லை. ஏனென்றால் புஜாரா தனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழ்ந்து வருகிறார். நாம் எல்லாரும் சூழ்நிலைகளுக்கு தகுந்தார்ப் போல் நடந்து கொள்வோம், கவனம் சிதறுவோம். ஆனால், புஜாரா அப்படியல்ல. ஏனென்றால், தன் அடி மனதில் தனது இலக்கு என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
"எப்படி இவ்வுளவு கவனத்தோடும் கட்டுப்பாடோடும் நடந்து கொள்கிறான் என எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். நிச்சியம் இது அவனது அம்மா கொடுத்த பரிசாகத் தான் இருக்க முடியும். அவன் சராசரி மனிதன் அல்ல என்பதை எப்போதும் நான் கூறுவேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். புஜாரா ஆண்மீகத்தில் முழு நம்பிக்கை உள்ளவர். சாதாரண சமயத்தில் அவன் என்ன நினைத்து கொண்டிருக்கிறான் என அப்பாவாகிய எனக்கே கண்டுபிடிக்க முடியாது. அப்படியிருக்கையில், போட்டியின் போது அவன் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அரிதாகவே கோப்பப்படுவான். எப்போதும் எளிமையாக வாழவே விரும்புவான்" என பெருமிதமாக கூறுகிறார் புஜாராவின் தந்தை.
மேலும் அவர் கூறுகையில், "நமது வாழ்க்கையில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று அன்பு, இன்னொன்று வெறுப்பு. இரண்டும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவை அந்த மனிதனின் வாழ்க்கையயே அழித்துவிடும். இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலை வேண்டும். அடுத்தவர்கள் மீது வெறுப்பை காண்பிக்கும் குணம் ஒருபோதும் புஜாராவிடம் இருந்ததில்லை. அதனால் தான் அவரால் களத்தில் அமைதியாக நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடிகிறது" என கூறுகிறார் புஜாராவின் தந்தை அரவிந்த்.