கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் "சர்ச்சைகளுக்கு" நடுவே சவுராஷ்டிரா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி மூன்றாம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் விதர்பா அணியை எதிர்த்து சவுராஷ்டிரா அணி விளையாடவுள்ளது. ரஞ்சி கோப்பையில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 275 ரன் அடித்தது. கர்நாடக தரப்பில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் கோபால் 87 ரன்னும், ஸ்ரீனிவாஸ் சரத் ஆட்டமிழக்காமல் 83 ரன்னும் அடித்தனர். சவுராஷ்டிரா அணி சார்பில் வேகப் பந்துவீச்சாளர் உனத்கட் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து முதல் இன்னிங்ஸை ஆடத் துவங்கிய சவுராஸ்க்டிரா அணி போதிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. இறுதியில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கர்நாடக தரப்பில் அற்புதமாக பந்து வீசிய மித வேகப் பந்துவீச்சாளர் ரோனித் மோர் ஆறு விக்கெட்டுகளை எடுத்தார்.
39 ரன்கள் முன்னனி பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய கர்நாடக அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன் அடித்தது. அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் கோபால் 61 ரன்கள் அடித்தார். சவுராஷ்டிரா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். 279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடத் தொடங்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வினய் குமாரின் வேகப்பந்து வீச்சில் சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்தவுடனேயே 'நடையை' கட்டினர்.
23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த கொண்டிருந்த சவுராஷ்டிரா அணியை மீட்க களம் இறங்கினார் புஜாரா. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற புஜாரா, உடனடியாக ரஞ்சி கோப்பையில் விளையாட வருவது அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. வழக்கம் போல நிதானமாக ஆடத் தொடங்கிய புஜாரா, சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் வினய் குமாரும், ரோனித் மோரும் கட்டுப்பாட்டோடு பந்துவீசி 10 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தனர். இது சவுராஸ்டிரா அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது.
இரண்டு அணிக்குமே புஜாராவின் விக்கெட் எவ்வுளவு முக்கியமானது என்பது நன்றாக தெரியும். 34 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த புஜாரா, வினய் குமார் வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது பந்து லேசாக அவரது பேட்டை உரசிச் சென்று கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. வினய் குமாரும் மற்ற கர்நாடக அணி வீரர்களும் நடுவரிடம் அவுட் என்று முறையிட்டனர். தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் பேட்டில் பந்து உரசியதாக கூறினர். ஆனால் நடுவர் விடாப்பிடியாக அவுட் இல்லை என அறிவித்தார். இதேப் போல் முதல் இன்னிங்ஸிலும் புஜாரா ஒரு ரன் எடுத்திருந்த போது நடுவரின் தவறான தீர்ப்பால் அவுட்டிலிருந்து தப்பித்தார். அதன் பிறகு புஜாரா எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் தனது அணுபவத்தை உதவியாக கொண்டு அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். இவருக்கு பக்க பலமாக மற்றொரு வீரரான ஜேக்சனும் அற்புதமாக பேட்டிங் செய்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ரஞ்சி கோப்பை காலியிறுதி போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக சதம் அடித்து சவுராஷ்டிரா அணிக்கு வெற்றி தேடித் தருவார் புஜாரா. அதேப்போல், இப்போட்டியிலும் கர்நாடக பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து முதல் தர போட்டியில் தனது 49-வது சதத்தை பதிவு செய்தார் புஜாரா. புஜாராவிற்கு உறுதுணையாக இருந்த ஜேக்சனும் இறுதி நாளில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது சவுராஷ்டிரா. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த புஜாரா 131 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
"இந்த மைதானத்தில் தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன் என்பதால் எனக்கு எப்போதுமே பெங்களூர் சின்னச்சாமி மைதானம் மிகவும் பிடிக்கும்" என பல முறை புஜாரா கூறியுள்ளார். ஆனால் நான்காம் நாள் ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு புஜாரா வெளியே செல்லும் போது, அரங்கில் இருந்த சில ரசிகர்கள் புஜாராவை பார்த்து "ஏமாற்றுகாரர்" என திட்டினர். அவுட் என தெரிந்தும் புஜாரா தொடர்ந்து விளையாடியது நல்ல வீரருக்கு அழகா என ட்விட்டரில் பல கிரிக்கெட் ரசிகர்கள் விவாதம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே நடுவரின் தவறான முடிவால் ஆட்டத்தின் போக்கே மாறியது பலத்த சர்சையை எழுப்பியுள்ளதோடு உள்ளூர் போட்டிகளிலும் சர்வதேச அளவிற்கு தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.