பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது கோலி தலைமையிலான இந்திய அணி.
மேக மூட்டத்திற்கிடையே புவனேஸ்வர் குமார் தனது முதல் ஓவரை வீச ஆயத்தமானார். இரண்டாவது பந்திலேயே ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பெவிலியன் திரும்பினார். மேகமூட்டத்துடன் மெல்லிய காற்று ஆடுகளத்தில் வீசிக்கொண்டிருந்தது. அதன் விளைவாக புவனேஸ்வர் குமார் பந்தை இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்தார்.
முதல் டி20 போட்டியில் பெரிதும் அடிவாங்கிய கலீல் அஹமதை இரண்டாவது ஓவரை வீச அழைத்து இந்திய கேப்டன் கோலி புது யுக்தியை கையாண்டார், அதாவது பும்ராவிற்கு முன்பாகவே கலீல் அஹமதை பந்துவீச செய்து அதிர்ச்சி கொடுத்தார்.கலீல் முதல் ஓவரை நேர்த்தியாக வீசி இருந்தாலும் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. அவரது அடுத்த ஓவரில் பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்த கிறிஸ் லின்னை அவுட் ஆக்கினார். பின்பு அதுக்கு அடுத்த ஓவரில் டார்சி ஷார்டை இன்சைட் எட்ஜ் மூலம் அவுட் ஆக்கினார் கலீல்.இது ஒரு சிறந்த “comeback” என வர்ணனையாளர்கள் கூறிக்கொண்டனர்.
ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை தனது இரண்டாவது ஓவரில் மாய்த்தார் பும்ரா. கடந்த போட்டியில் கடும் விமர்சனத்திற்கு உண்டான க்ருனால் பாண்டியா க்ளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்தார். மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.அதன்பின் இறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேர்ரி ,குலதீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். பேன் மேக்டெர்மோன்டட் மற்றும் நாதன் கோல்டர் நைல் இணை அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர்.பத்தொன்பதாவது ஓவரின் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா 132 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சிறிது நேரம் கழித்து மழை நின்றபின் DLS முறையில் இந்தியாவிற்கு திருத்தப்பட்ட இலக்காக 137 ரன்களை (19 ஓவரில் ) சேஸ் செய்ய ரோஹித் மற்றும் தவான் இணை தயாராகிக் கொண்டிருந்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
மீண்டும் ஒரு கட்டத்தில் மழை ஓய்ந்த பின் DLS முறையில் திருத்தப்பட்ட டார்கெட்டான 90 ரன்களை 11 ஓவர்களில் எடுத்தால் வெற்றி என ஆட்டக்களத்தில் வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.ஆனால் ஆக்ரோஷ மழை பின்வாங்கவில்லை மீண்டும் கொட்ட ஆரம்பித்து விட்டது.
மழை ஓயும் என்று காத்திருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் சிறிது நேரத்திற்குப் பின்பு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்த போட்டியில் ஜெயித்தால் தான் தொடரை சமன் செய்ய இயலும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது இந்திய அணி. அடுத்த போட்டி சிட்னி நகரில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.ஆஸ்திரேலியா தொடரை வெல்லவும் இந்தியா தொடரை சமன் செய்யவும் முனைப்போடு களத்தில் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரை இந்தியாவால் வெற்றி பெற இயலாது, ஆனால் அடுத்த போட்டியில் வெற்றி கண்டால் தொடரை சமன் செய்யலாம். கடந்த 7 டி20 சர்வதேச தொடர்களில் இந்தியா வெற்றியைத் சுவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.