ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த ஐபிஎல் தொடரானது, 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடங்களாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பல முன்னணி நட்சத்திர வீரர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். அந்த நட்சத்திர வீரர்களில் மிக முக்கியமான வீரர் “மிஸ்டர் ஐபிஎல்” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா படைக்கவிருக்கும் 3 சாதனைகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) 100 கேட்ச் பிடித்த ஒரே வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்துவார். மிகக்கடினமான கேட்ச்களையும் முயற்சி செய்து பிடித்துவிடுவார். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்படுகிறார். இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 95 கேட்ச்களை பிடித்துள்ளார். இன்னும் 5 கேட்ச்சிகளை பிடித்தால், ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைப்பார். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா 79 கேட்ச்களை பிடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
#2) 5000 ரன்களை அடித்த முதல் வீரர்
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், முதல் மூன்று இடங்களிலுமே நமது இந்திய வீரர்கள் தான் இருக்கின்றனர். அதில் முதல் இடத்தில் ரெய்னாவும், இரண்டாவது இடத்தில் விராட் கோலியும், மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர். ஆனால் இதுவரை எந்த வீரரும் 5000 ரன்களை கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா 4985 ரன்களை அடித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ரெய்னா இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இன்னும் 15 ரன்கள் அடித்தால், 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
#3) அதிக அரைசதம் அடித்த ஒரே வீரர்
இதுவரை அதிக அரை சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கவுதம் கம்பீர் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 36 அரை சதங்களை ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார். அவருடன் இணைந்து முதல் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர். வார்னரும் ஐபிஎல் தொடரில் 36 அரை சதங்கள் விளாசியுள்ளார். சுரேஷ் ரெய்னா 35 அரை சதங்களை விளாசியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அதிகமாக அரை சதம் விளாசினால், அதிக அரை சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்தப் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 34 அரை சதங்களை ஐபிஎல் தொடரில் அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் ரெய்னா டி20 போட்டிகளில், 8000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.