இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடரான ரஞ்சி கிரிக்கெட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்புச் சாம்பியனான விதர்பா அணிக்கும், கேரளா அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று தொடங்கியது.
உமேஷ் யாதவ் அசத்தல்.
இதில் டாஸ் வென்ற விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் பசால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனது முதல் இன்னிங்சை துவக்கிய கேரளா அணிக்கு, விதர்பா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகப் பெரும் தலைவலியாக அமைந்தார். உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சில் கேரளா அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
28.4 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்த கேரளா அணி 106 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 37 ரன்களும், கேப்டன் சச்சின் பேபி 22 ரன்களையும் சேர்த்தனர். கேரளாவை கதிகலங்க வைத்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது அவரின் தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சு சாதனையாக அமைந்தது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னிலை பெற்ற விதர்பா.
பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணிக்கு தொடக்கநிலை வீரர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். ஒரு கட்டத்தில் 170-2 என வலுவான முன்னிலை பெற்று இருந்த விதர்பா அணியை அதன் பின்னர் கேரளா வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக கட்டுப்படுத்தினர். முடிவில் விதர்பா அணி 52.4 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 102 ரன்கள் முன்னிலை பெற்றது.
விதர்பா அணியில் கேப்டன் ஃபைஸ் பசால் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார். கேரள அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சந்திப் வாரியர் 5 விக்கெட்டுகளும், பாசில் தம்பி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மீண்டும் சுருண்டது கேரளா.
பின்னர் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் அந்த அணிக்கு இந்த முறையும் தடுமாற்றமான தொடக்கமே நிகழ்ந்தது. முதல் இன்னிங்சில் அசத்திய உமேஷ் யாதவ் உடன் இந்த முறை விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாஷ் தாக்கூர் இணைந்து கேரளா அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் தொல்லை கொடுத்தனர்.
முடிவில் கேரளா அணி 100 ரன்களை கூட தொட முடியாமல் 24.5 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 37 ரன்கள் சேர்த்தார். விதர்பா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும் யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மொத்தம் 106.1 ஓவர்கள் மட்டுமே நடந்த இப்போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் ஆக மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ‘உமேஷ்யாதவ்’ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.