2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய குல்பதின், தனது தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற்றுத்தர முடியாமல் தமது அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். இதனையடுத்து ஏமாற்றமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆல்ரவுண்டர் ரஷீத் கானை அனைத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம் செய்தது.
மேலும், குல்பதின் நயிப்புக்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி வந்த ஆஸ்கர் ஆஃப்கானை அனைத்து மூன்று தரப்பு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இவரது தலைமையில் 9 போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்திலும் தோல்விகளைக் கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேபோல் 2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரான நயீப் 420 ரன்களை வாரி வழங்கி தான் 9 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்த அணியின் ஒரு பந்துவீச்சாளர் தரப்பில் அதிகமாக வழங்கப்பட்ட ரன்களும் இதுவேயாகும். மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் கூட இவரது தவறான கேப்டன்சி நகர்வால் நூலிழையில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர், ஒருநாள் போட்டிகளில் வழிநடத்திய ஆஸ்கர் ஆப்கான் ஆசிய கோப்பையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தனது தலைமையில் இரு வெற்றிகளை குவித்து சாதனை படைத்திருந்தார். அது மட்டுமல்லாது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கையில் முடித்து பலம் மிகுந்த இந்திய அணிக்கே அதிர்ச்சி அளித்தார். டேராடூனில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை ஆஸ்கர் ஆப்கானின் தலைமையில்தான் உச்சி முகர்ந்தது. இதுபோன்ற சாதனைகளை பல படைத்திருந்த அனுபவ வீரரான ஆஸ்கார் ஆப்கான், நடப்பு உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் வெறும் 6 ஆட்டங்களில் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்றார் என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை புதிதாக நியமனம் செய்யப்பட்ட ரஷீத் கான் வழி நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரிலும் தனது முத்திரையை பதிக்க உள்ளார், ரஷீத் கான். இதற்கு அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் தமது கேப்டன்சியை ரஷித் கான் வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார்.