இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய அணி வெளிநாட்டு சுற்று பயணத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி கடந்த ஒரு வருடம் கடந்து வந்த பாதையை பற்றி ரவி சாஸ்திரி cricbuzz இணையதளத்திற்கு நேர்காணல் அளித்திருந்தார். அப்பேட்டியில் அவர் விராத் கோலியை மேற்கிந்திய ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கானுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியதை கீழே காண்போம்.
"நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரது தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாருமில்லை. பயிற்சிப் பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் யாரும் இல்லை.
இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நான் நினைக்கிறேன். கோலி பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவுப்படுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்ததில் கோலி பல மடங்கு முன்னேற்றம் அடைந்துவிட்டார். அவர் மேலும் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் வென்றதை குறிப்பிடலாம்”
விராட் கோலி பற்றி மேலும் அவர் கூறுகையில் கோலி ஒரு கேப்டனாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது எனக் கூறினார்.
இத்தகைய ஒப்பீடு இந்திய ரசிகர்கள் ஏறக்குறைய ஏற்றுக்கொள்வார்கள். அவர் கூறியதைப் போலவே கடந்த மூன்று வருடங்களில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கேப்டனாகவும் மற்றும் அணியின் ஏற்ற இறக்கங்களை வெற்றிகரமாக சந்தித்து சிறந்த முறையில் அவர் இந்திய அணியை வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்றார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி கேப்டன் என்ற பெருமையும் பெற்றார்.
கடந்த ஒரு வருடத்தில் இந்திய அணி கேப்டன் பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் ஒரே வருடத்தில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் ஆசிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் கடந்த வருடம் பெற்றார். மேலும் 2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற மூன்று உயரிய விருதையும் அவர் பெற்றார். இம்மூன்று விருதையும் ஒரே வருடத்தில் வென்ற முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
ரவி சாஸ்திரி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை பற்றி கூறும் பொழுது குல்தீப் யாதவ் வெளிநாடுகளில் இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளர் என குறிப்பிட்டு கூறினார்.