மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கு ரவீந்திர ஜடேஜா உடற் தகுதி பெற்றுள்ளார் - பிசிசிஐ

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

இந்தியா பயிற்சியாளரான ரவிசாஸ்திரி சில மணி நேரங்களுக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதிப்பட்ட நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்தார் என்று தெரிவித்து சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார். இது தொடர்பாக பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரவீந்திர ஜடேஜா தற்போது முழுத்தகுதியுடன் உள்ளதாகவும் அடுத்த போட்டிக்கு அவரை தேர்வு செய்ய இயலும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு, தோள்பட்டையில் ஏற்படும் காயத்திற்கான அறிகுறிகள் தெரிந்ததாகவும், அதற்காக ஊசி போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் நடந்த ரஞ்சி போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா எந்தவித வலியும் இல்லாமல் களம் கண்டிருந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் மறுபடியும் ரவீந்திர ஜடேஜாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மறுபடியும் ஊசி போட பட்டதாகும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா ஆடும் அணியில் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது. இதை பற்றி விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தன் அறிக்கையில் கூறியதாவது “பெர்த் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, நடைபெற்ற வலைப்பயிற்சியில் ரவீந்திர ஜடேஜா, வலியால் அவதிப்பட்டு ஆட்டத்தில் தீவிரம் காண்பிக்க தவறினார், எனவே இரு தரப்பினரும் (அணி நிர்வாகம் மற்றும் ஜடேஜா) குறைபாடுகளை ஒப்புக் கொண்டதன் காரணமாக, ஆடும் அணியில் தேர்வாக ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.” என தன் அறிக்கையில் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது பின்வருமாறு:

“ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் நீண்ட நேர பந்துவீச்சில் ஈடுபட்டதால் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, அதன் காரணமாக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஊசி போடப்பட்டது. அதன்பின்பு அவரது வலிக்கான அறிகுறிகள் இல்லாமல் போகவே 12-15 நவம்பரில் தனது ரஞ்சி அணியான சௌராஷ்டிரா-விற்கு களம் கண்டிருந்தார் ஜடேஜா. அந்தப் போட்டிகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் 64 ஓவர்களை பூர்த்தி செய்திருந்தார் ஜடேஜா. இதனடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் தேர்வானார் ஜடேஜா” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும் பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தை பற்றி அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது பின்வருமாறு :

“ஆஸ்திரேலியாவுக்கு சென்ற ஜடேஜா, கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1 அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், தோள்பட்டை காயத்திற்கான அறிகுறிகள் தெரிந்தது, அதற்காக மறுபடியும் ஊசி போடப்பட்டு புனரமைப்பு உத்திகள் கையாளப்பட்டன. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடுகள், கடினமாக ஆட வேண்டிய டெஸ்ட் போட்டியில் ஈடுசெய்ய முடியாத வகையில் இருந்ததால் இரண்டாவது டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது” என்று பிசிசிஐ விளக்கியுள்ளது.

“மெல்போர்னில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா காயத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், முழுத்தகுதியுடன் உள்ளார், எனவே ஆடும் அணியில் தேர்வாக ஜடேஜா தகுதி பெற்றுள்ளார்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது

ஏற்கனவே இந்தியாவின் முன்னணி ஸ்பின்னராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் காயத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா யாரை களம் காணும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

App download animated image Get the free App now