ஐபிஎல் தொடரின் 12வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிந்துவிட்டது என்றே கூறலாம். இதில் சென்னை அணி புள்ளி பட்டியலில் 6 வெற்றிகளுடன் எளிதாக ப்ளே ஆப்ஸ் செல்லும் நிலையில் உள்ளது. பெங்களூர் அணி இதுவரை ஆறு போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் தோல்வியைத் தழுவு கடைசி இடத்தில் உள்ளது. இதைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு பேராடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் விராத்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற விராத்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் களமிறங்கினர். நிதானமான துவக்கம் தந்தனர் இந்த ஜோடி. சிராஜ் வீசிய 6 வது ஓவரில் கெயில் 28 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்த அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்தனர். அடுத்த ஓவரிலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராகுல் 18 ரன்கள் எடுத்த நிலையில் சகால் வீசிய பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின்னர் மயங்க் அகர்வால் கெயில் உடன் ஜோடி சேர்ந்தார். ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் குவித்திருந்த அகர்வால் சகால் வீசிய 9 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த கெயில் அரைசதத்தை கடந்தார். இறுதியில் கெயில் மந்தீப் சிங் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டத் துவங்கினார். இருவரும் சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தனர். கெயில் துர்தஷ்டவசமாக தனது சதத்தினை ஒரு ரன்னில் தவறவிட்டு 99* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இன்னிங்ஸ்யை நிறைவு செய்தார். 20 ஓவர் முடிவில் 173 ரன்கள் குவித்தனர். பெங்களூர் அணி சார்பில் சகால் 2 விக்கெட்டுகளும், மெயின் அலி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கீட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது. வழக்கம் போல் விராத்கோலி மற்றும் பார்தீவ் படேல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணிக்கு சிறப்பான துவக்கம் தந்தனர். சிக்சர் அடிப்பதில் ஆர்வம் காட்டாத இவர்கள் பவுண்டரிகளாக அடித்து ஸ்கோரை உயர்த்தினர். பார்தீவ் படேல் 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வீன் வீசிய பந்தில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆனார். பின் ஏபி டிவில்லியர்ஸ் விராத்கோலியுடன் இணைந்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். நிலைத்து ஆடிவந்த விராத்கோலி தனது அரைசதத்தினை கடந்தார்.
இவர்களின் கூட்டணியை வீழ்த்துவதற்கு பஞ்சாப் அணி பல பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. கடைசியில் விராத்கோலி 67 ரன்கள் இருந்த போது ஷமி வீசிய பந்தில் முருகன் அஸ்வினிடம் கேட்ச் ஆனார். கடைசி 4 ஓவர்களில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டன. ஸ்டைனிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் பவுண்டரிகள் பறக்கவிட்டு இலக்கை துரத்தினர். டிவில்லியர்ஸ் 35 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். இறுதியில் 19.2 ஓவரில் வெற்றி இலக்கை துரத்தியது பெங்களூர் அணி. டிவில்லியர்ஸ் 59 ரன்களுடனும், ஸ்டைனிஸ் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்த தொடரில் தொடர்ந்து ஆறு தோல்விக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி. அதிரடியாக ஆடிய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.