உலககோப்பை தொடர் வரும் மே 30 முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. முதலில் நியூசிலாந்தில் துவங்கி தற்போது இலங்கை வரை 15 பேர் கொண்ட அணிகளை அறிவித்துள்ளன. இதில் ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த அணிகளிலும் சில வீரர்கள் இடம் பெறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி இந்தியாவில் அம்பத்தியு ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறாதது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளானது. இலங்கை அணியில் கருனத்னே கேப்டனாக இடம் பெற்றது அனைவரிடத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் பங்கேற்றது 2015-ல் தான். இருந்தபோதிலும் இவரை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உலககோப்பை அணியின் கேப்டனாக நியமித்ததற்கு முக்கிய காரணம் இவர் தலைமையில் இலங்கை அணி தென்னாப்ரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதது தான்.
அந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரராக இருந்தாலும் கடைசி இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டில் வசித்து குடியுரிமை பெற்றுள்ளதால் இவரை இங்கிலாந்து அணியில் உலககோப்பை அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்தது ஐந்தாண்டுகளாவது இங்கிலாந்து நாட்டில் குடியிருந்தால் தான் அந்த அணிக்காக விளையாட முடியும் என பழைய சட்டம் இருந்தது. இதனை ஆர்ச்சரை அணியில் சேர்ப்பதற்காக இரண்டாண்டுகளாக குறைத்தது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம். இவரை தற்போது உலககோப்பை அணியில் சேர்க்கப்படாததற்கு முக்கிய காரணம் அவர் இங்கிலாந்து நாட்டிற்காக ஒரு போட்டியில் கூட விளையாடாதது தான்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த நாட்டிற்காக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. காரணம் அந்நாட்டு நிர்வாகம் விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த சம்பளம் தருவதாலேயே. இதனால் தான் ப்ராவோ, கெயில், ரஸ்ஸல் என பல முண்ணனி வீரர்களும் அந்நாட்டு அணிக்காக விளையாட மறுத்து வருகின்றனர்.
இருந்தபோதும் ஆர்ச்சர் தனது சிறப்பான பந்துவீச்சை பிக் பேஸ் லீக், ஐபிஎல் என அனைத்து டி20 தொடரிலும் பங்கேற்று வெளிப்படுத்தியுள்ளார். உயரமான தோற்றத்தை கொண்டுள்ள இவர் 150கிமீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அதிலும் மெதுவாகவும் பந்துவீசி பேட்ஸ்மேனை குழப்பமடையச் செய்பவர். இவரின் பந்துவீசும் தன்மையைக் கண்ட இங்கிலாந்து அணி நிர்வாகம் இவரை அந்நாட்டிற்காக விளையாடும் படி அழைத்தது. ஏனென்றால் இங்கிலாந்து அணி வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொண்டது. ஏழாவது விக்கெட் வரை சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டது. இருந்தாலும் பந்துவீச்சில் அந்த அணி பலம் வாய்ந்ததாக இல்லை, எனவே ஆர்ச்சரை அணியில் சேர்க்கும் பட்சத்தில் அந்த அணி கூடுதல் பலம் பெறும்.
இங்கிலாந்து அணி உலககோப்பை தொடர் விளையாடுவதற்கு முன் பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் தொடர் ஒன்றில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம்பெற உள்ளார். அந்த தொடரில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தால் உலககோப்பை அணியில் பங்குற்கபோகும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் யாரேனும் ஒருவருக்கு பதிலாக உலககோப்பை அணியில் இடம் பெறுவார் ஆர்ச்சர். மே 23 வரை அனைத்து நாடுகளும் தங்களது உலககோப்பை அணியில் எந்த மாற்றத்தை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம். எனவே பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் அவரின் பந்துவீச்சைப் பொறுத்தே உலககோப்பை அணியில் அவரின் இடம் நிரந்தரம் செய்யப்படும்.