2019 உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான ஆட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் மீண்டும் ஒரு முறை இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றது, இந்திய அணி. இந்த மகத்தான வெற்றியின் மூலம் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் தோற்கடிக்க முடியாத அணியாகவே திகழ்ந்து வருகின்றது, இந்திய அணி. இந்த இருவேறு கிரிக்கெட் நாடுகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இவ்வகை மோதலை பல கோடி ரசிகர்கள் காண ஆர்வமாக இருந்தனர்.
வழக்கம் போல, இந்திய அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை செலுத்தியுள்ளது. இதில் வருந்தத்தக்க வகையில் உள்ளது என்னவென்றால், உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் இந்த இருவேறு ஆசிய நாடுகள் மோதும் போட்டி ஒரு அணிக்கு சாதகமாகவே தொடர்ந்து முடிந்து வருவது ஒருவகையில் சலிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான போட்டிகளின் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான காரணங்களை பற்றி இந்த தொகுப்பை எடுத்துரைக்கின்றது.
#1.இந்திய அணியின் உள்நாட்டு பயிற்சி மற்றும் கட்டமைப்பு:
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி மற்றும் இந்திய ஏ அணிகள் உலகின் தலை சிறந்தவையாக தற்போது உருப்பெற்று வருகின்றன. இந்த அணிகளின் பயிற்சியாளர்கள், மற்ற அலுவலர்கள், உட்கட்டமைப்பு, ஆளுமை, அணி நிர்வாகம் போன்றவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒப்பிடும்போது சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், சில தனிப்பட்ட காரணங்களால் பாகிஸ்தான் அணியின் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு வலுவிழந்து காணப்படுகிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த மற்றும் திறமையுள்ள வீரர்கள் பலர் இருப்பினும், அவர்களின் திறமைகள் போதிய அளவில் பயன்படுத்தப்படாமல் வீணாக்கபடுகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் இவர்களின் பங்கு மோசமாக அமைந்து வருகின்றது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கூட பாகிஸ்தான் அணி ஆறாம் இடத்தில் தான் தற்போது வகித்து வருகிறது.
#2.மனதளவிலான நெருக்கடி:
கிரிக்கெட் களத்தில் ஒவ்வொரு முறையும் இந்திய அணியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்கள் சற்று மனதளவில் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இது இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் தோற்பதற்கு முக்கிய காரணியாக திகழ்கிறது. தற்போதைய வீரர்கள் மட்டுமல்லாது, கடந்த காலங்களில் விளையாடிய வீரர்களும் இவ்வகை நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டனர். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு விராட்கோலி அளித்த பேட்டியில், "கூடுதலாக ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறோம். மற்ற அணிகளைப் போலவே பாகிஸ்தானையும் நாங்கள் பார்க்கிறோம்" என்றார். ஆனால், இதற்கு எதிர்மாறாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், "நாளை முதல் பாகிஸ்தானிய வீரர்கள் நாயகர்களாக மாறப் போகிறார்கள். அவர்களது வாழ்நாள் முழுவதும் நினைவுபடுத்தபடுவார்கள்" என்று கூறினார். இது போன்ற வார்த்தைகள் பாகிஸ்தான் வீரர்கள் இடையே நெருக்கடியை உண்டாக்கியது. ஒருவேளை இந்திய பயிற்சியாளர் இதுபோன்ற வார்த்தைகளை தெரிவித்து இருந்தால் கூட இந்திய அணியின் முடிவு சற்று பாதகமாய் அமைந்திருக்கும். எனவே, பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு இது போன்ற காரணங்களும் தடையாய் உள்ளன.
#3.போதிய உடல் தகுதி மற்றும் பீல்டிங் முயற்சிகள்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த உடல் தகுதியுடன் விளையாடும் அணிகளில் ஒன்றாக உள்ளது, இந்திய அணி. அணியின் கேப்டனாக விராட் கோலி தனது சக வீரர்களின் உடல் தகுதியில் தகுந்த கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக தாமே 100 சதவீத முயற்சியினை களத்தில் வெளிப்படுத்தி வருகிறார், விராட் கோலி. பாகிஸ்தான் வீரர்களின் ஃபீல்டிங் செயல்பாடுகள் இந்திய அணியின் செயல்பாட்டை விட மோசமானதாகவே உள்ளது. இந்த பொறுப்பற்ற தன்மையால், ஆட்டத்தின் முடிவு எதிரணிக்கு சாதகமாய் முடிந்துவிடுகிறது. உலக கோப்பை தொடரில் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் ஓர் அணி தனது ஆகச் சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், பாகிஸ்தான் அணியின் பீல்டிங் செயல்பாடு மேற்குறிப்பிட்ட வகையில் சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஃபக்கர் ஜமான் மற்றும் சதாப் கான் ஆகியோர் ரன் அவுட் வாய்ப்பினை தவற விட்டனர். இது இந்திய அணிக்கு சற்று சாதகமாக அமைந்தது. ஆனால், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி போன்ற உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களின் கட்டுக்கோப்பான பீல்டிங் மற்றும் உலகின் அபாயகரமான பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும் ஒருசேர பாகிஸ்தான் அணி தொடர்ந்து ரன்களை குவிக்க சற்று தடுமாறியது.