சிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சாதனைகளை இங்கு பார்ப்போம்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான எம் எஸ் தோனி இப்போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ( டோனி, ஆசிய XI அணிக்காக பங்கேற்றுள்ளார் ). 333 போட்டிகளில் ஆடியுள்ள தோனி தனது 279வது இன்னிங்சில் இச்சாதனையை படைத்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரராகவும், ஒட்டுமொத்த அளவில் 13வது வீரராகவும் இணைந்தார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ‘பின்ச்’ இன் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஒருநாள் போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இச்சாதனையை தனது 96 வது ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம்பெற்றுள்ள பீட்டர் சிடில் தனது கடைசி பந்தில் குல்தீப் யாதவின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசியாக 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 15 ஆவது விக்கெட்டை எடுத்த சிடில், தனது 16 ஆவது விக்கெட்டை எடுப்பதற்கு 8 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணிக்கு சர்வதேச அளவில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20) இந்த வெற்றி 1000வது வெற்றியாக பதிவாகியுள்ளது மேலும் சர்வதேச அளவில் ஆயிரம் வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.
இப்போட்டியில் தனிநபராக வெற்றிக்கு போராடிய ரோஹித் சர்மா அபார சதம் அடித்தார். இந்த போட்டியில் 6 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 64 சிக்சர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பாக ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து இருந்த பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி (இலங்கைக்கு எதிராக 63 சிக்ஸர்கள்) சாதனையை ரோகித் சர்மா இன்று முறியடித்தார். மேலும் 64 இன்னிங்சுகளில் இச்சாதனையை படைத்திருக்க, அதை ரோகித் சர்மா வெறும் 29 இன்னிங்சுகளில் முறியடித்து சாதனை படைத்தார்.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை உடைத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவிய ‘ஜே ரிச்சர்ட்சன்’ ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரிச்சர்ட்சன் இப்போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை (10-2-26-4) பதிவு செய்தார்.
இப்போட்டியில் முதல் ஓவரிலேயே ஷிகர் தவானின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த ‘ஜேசன் பேரென்டாய்ஃப்’ க்கு இதுவே முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பேரென்டாய்ஃப்’ 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 15-ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.