ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன்-ல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் பல சதனைகளை புரிந்துள்ளனர், அவற்றை இங்கு காணலாம். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் வைத்துள்ளன. இந்நிலையில் மூன்றாவது (பாக்சிங் டே) டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்-ல் 447 ரன்கள் எடுத்த நிலையில் டிக்லேர் செய்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி வீரர் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் படைத்த சில சாதனைகளை இங்கு காண்போம்.
1) தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரே வருடத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியபந்துவீச்சாலர் பும்ரா
இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக பந்து வீசும் பும்ரா ஒருநாள் போட்டிகளில் நம்பர்-1 இடத்தில் உள்ளார். ஆனால் பும்ரா இந்த வருடமே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். \கேப்டவுன்-ல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின் ஜோகெனஸ்பெர்க்-ல் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்ல் 54-5 என தனது முதல் 5 விக்கெட்டுகளை டெஸ்ட் சர்வதேச போட்டிகளில் பதிவு செய்தார். பின்னர் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 85-5 என தனது இரண்டாவது 5 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் பதிவு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 33-6 விக்கெட்டுகளை வீழ்தியதின் மூலம் ஒரே ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் பும்ரா.
2) வெளிநாட்டு தொடர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் பும்ரா
தற்போது நடைபெற்று வரும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் பும்ரா இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிறார். இவர் இந்த வருடத்தில் 45 விக்கெட்டுகளை வெளிநாட்டு தொடரில் மட்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பின் இந்த வரிசையில் ஷமி 43 விக்கெட்டுகளுடனும் , இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே 2006-ம் ஆண்டு 41 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
3) ஒருவருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி பும்ரா/ஷமி/இஷாந்த் ஷர்மா
இந்த வருடத்தில் இந்திய அணி பெரும்பாலும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளிலே விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் பும்ரா/ ஷமி/இஷாந்த் ஷர்மா கூட்டணி 127 விக்கெட்டுகளை சாய்த்துள்ளது. இதில் பும்ரா 45 விக்கெட்டுகளையும், ஷமி 43 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் ஒருவருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி என்ற சாதனையை சொந்தமாக்கலாம்.