2019 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரிமியர் லீக் டி 20 போட்டிகள் தற்போது வங்காளதேசத்தில் நடந்து வருகின்றது. இதில் ‘சில்ஹெட் சிக்ஸர்ஸ்’ அணிக்காக களம் இறங்கிய இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், வலதுகை பேட்ஸ்மேன் ஆக மாறி பந்தை விளாசும் காட்சிகள் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் 12 மாத தடையை அனுபவித்துவரும் டேவிட் வார்னர் தற்போது வங்காளதேச பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். அதில் நேற்று ‘ராக்பூர் ரைடர்ஸ்’ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ‘சில்ஹெட் சிக்ஸர்ஸ்’ அணியில் 3 ஆம் நிலையில் களமிறங்கிய டேவிட் வார்னர் 19வது ஓவரில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 19-வது ஓவரை வெஸ்ட் இண்டீசின் சுழல் பந்துவீச்சாளர் கிறிஸ் கெய்ல் வீசினார். இடக்கை பேட்ஸ்மேனாக இந்த ஓவரில் ஆடிய வார்னர் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்து கெய்ல் வீசிய இரண்டு பந்துகளும் ரன்கள் எடுக்க இயலவில்லை.
இந்நிலையில் நான்காவது பந்திற்கு வார்னர் முழுமையான வலதுகை பேட்ஸ்மேன் ஆக மாறி நின்றார். கெயில் வீசிய அந்த நான்காவது பந்தை வார்னர் அவரது தலைக்கு மேலாக சிக்சர் அடித்து அசத்தினார். மேலும் அந்த ஓவரில் அவர் வீசிய அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரி அடித்து அசத்தினார்.
இடது கை பேட்ஸ்மேனான நின்ற வார்னர் 33 பந்துகளில் 47 ரன்களையும், வலதுகை பேட்ஸ்மேன் ஆக நின்ற வார்னர் 3 பந்துகளில் 14 ரன்களையும், ஆக ஒட்டுமொத்தமாக 36 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில், “கிறிஸ் கெயிலின் உயரத்திற்கும் அவர் பந்து வீசிய அளவிற்கும் வலதுகை பேட்ஸ்மேன் ஆக மாறினால் தான் சிறப்பாக அடிக்க முடியும் என்ற எண்ணம் எனது மனதில் இருந்தது. அதை சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி".
மேலும் அவர் கூறுகையில், “நான் கோல்ப் விளையாட்டை வலது கையில் தான் விளையாடுவேன். பந்தை வலுவாக அடிப்பதற்கும், எல்லை கோட்டை கடக்க செய்வதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம்” இவ்வாறு வார்னர் கூறினார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ‘சில்ஹெட் சிக்ஸர்ஸ்’ அணியில் லிட்டன் தாஸ் 70 ரன்கள், டேவிட் வார்னர் 61* ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ‘ராக்பூர் ரைடர்ஸ்’ அணி தரப்பில் ஷாஃபியுள் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ‘ராக்பூர் ரைடர்ஸ்’ அணியில் ரைலீ ரூசோ 58 ரன்கள் எடுத்து போராடினாலும் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ‘ராக்பூர் ரைடர்ஸ்’ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ‘சில்ஹெட் சிக்ஸர்ஸ்’ அணி தரப்பில் மெகதி ஹசன், டஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் ‘சில்ஹெட் சிக்ஸர்ஸ்’ அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக 70 ரன்கள் குவித்து அசத்திய லிட்டன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
எழுத்து : விவேக் இராமச்சந்திரன்.