இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். அவர் சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருந்தாலும் அந்த சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனையை படைத்துள்ளார். அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் அரை சதம் விளாசினர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் வெறும் 254 ரன்கள் மட்டுமே அடித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நம் இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 133 ரன்கள் விளாசினார். விராட் கோலி மற்றும் தவான் சிறப்பாக விளையாட தவறியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ரிச்சர்ட்சன் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் .
இருப்பினும் ரோஹித் சர்மா சதம் அடித்ததால் சற்று ஆறுதலாக இருந்தது. இந்த சதத்தின் மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ்-இன் சாதனையை உடைத்துள்ளார் ரோஹித். இதுவரை இவர் ஆஸ்திரேலிய மண்ணில் 3 சதங்களை அடித்துள்ளார். ரோகித் சர்மா இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 சதங்களை விளாசியுள்ளார். இன்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்தார். ஆக மொத்தம் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் சர்மா 4 சதங்களை விளாசியுள்ளார். இதன் மூலம் இதுவரை மூன்று சதங்கள் மட்டுமே அடித்த விவியன் ரிச்சர்ட்ஸ்ன் சாதனையை தற்போது முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி இதுவரை இரண்டு சதங்களை அடித்துள்ளார் எனவே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும், ரோஹித் சர்மா இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். முன்பு கில்கிறிஸ்ட் 1622 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்தில் இருந்தார். அவரை ரோஹித் முந்தி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் சச்சின் (3077 ரன்கள்) மற்றும் ரிக்கி பாண்டிங் (2164 ரன்கள்) இருக்கின்றனர். ரோஹித் சர்மாவின் சதம் வீண் போனாலும் ஆஸ்திரேலிய மண்ணில் புதிதாக இந்த இரண்டு சாதனையை முறியடித்துள்ளார்.