ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் களம் கண்ட இந்திய அணி, விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றியை சுவைத்திருந்தது. புஜாராவின் நேர்த்தியான ஆட்டமும் சிறந்த பந்து வீச்சும் இந்தியா வெற்றி பெற காரணிகளாக அமைந்தது. போட்டியின் கடைசி நாளில் வெற்றிபெற்றதையடுத்து, அந்நிய மண்ணில் இதுவரை நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
3 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்தியாவின் ஆதிக்கமே பெருமளவில் இருக்கும் என்றே கூறலாம். ஸ்மித் மற்றும் வார்னர் தடையில் உள்ளதால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை சற்று மந்தமாகவே காணப்படுகிறது. இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியில் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடியது குறிப்பிடத்தக்கது. நாதன் லியோனின் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி போட்டியில் நிலைத்து நின்றது.
இந்திய அணி ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராகப் பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை ஏனெனில் முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் முதல் போட்டியில் சொதப்பி இருந்தனர். எனவே ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்குவது மூலம் அவர் உத்வேகத்துடன் எப்படி ஒருநாள் போட்டிகளில் செயல்படுகிறாரோ, அதைப்போலவே டெஸ்ட் போட்டிகளிலும் தனது பங்கினை நிலைநாட்டுவார் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த போட்டியில் கேஎல் ராகுல் இரண்டாவது இன்னிங்சில் நன்கு ஆடி இருந்தாலும், பார்ட்னர்ஷிப்பை மேம்படுத்த தவறினார். இந்திய அணியில் உள்ள மற்ற தொடக்க ஆட்டக்காரர்களைக் காட்டிலும் கேஎல் ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. பெரும்பாலும் வாய்ப்புகளை தவற விட்ட கேஎல் ராகுல் அனேகமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படமாட்டார் என்று தெரிகிறது.
தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுக்கு இந்த வாய்ப்பினை அளித்தால் அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. இது இந்திய அணிக்கு புது முயற்சியாக அமையும்.
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா ஆடிய 45 இன்னிங்சில் 38.90 என்ற சராசரியை வைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த 177 ரன்கள், இவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதேசமயம் கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 53 இன்னிங்சில் 37.13 என்ற சராசரியை வைத்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா தன்னை ஆகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக நிலைநிறுத்திக் கொண்டது நம் அனைவரும் அறிவர். ஆனால் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ஒரு வாய்ப்பு கூட அமையவில்லை. சமீபகாலமாக இந்தியாவின் தொடக்க ஜோடிகள் சொதப்பி வருவதால் ரோஹித் ஷர்மா சிறந்த மாற்றாக இருப்பார்.
சேவாக் 4-வது பேட்டிங் வரிசையில் விளையாடா முடியுமா என்று நினைத்து பாருங்கள் ?. இல்லை அது கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. அதேபோல்தான் ரோஹித் ஷர்மாவும். ஷர்மாவை டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால் சேவாக் ஆடும் ஆக்ரோஷமான ஆட்டத்தை போன்று ரோஹித்திடம் எதிர்பார்க்கலாம்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா 6-வது வரிசையில் களமிறங்கினார். அனைவரும் ரோஹித் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவர் ஏமாற்றமே அளித்தார்.
நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 0-1 இன்று முன்னிலையில் இருக்கும் இந்தியா ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால், இந்தியா மேலும் வலுப்பெறும். புஜாரா, கோலி மற்றும் ரஹானே அடுத்தடுத்து பேட்டிங் வரிசையில் உள்ளதால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக இது வழிவகுக்கும். அனேகமாக இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடனே களமிறங்கும். இருந்தாலும் ரோஹித் ஷர்மாவுக்கு தொடக்க ஆட்டக்காரராக உயர்வு கிடைத்தால் இந்தியா பலப்பெரும் என்பதில் சந்தேகமில்லை.