2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த பெரும் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சில மாற்றங்களை இந்திய அணியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட்டில் ஒரு கேப்டனை பொறுத்தே அந்த அணி சிறந்த அணியா என்பதனை நாம் கூற முடியும். ஒரு அணியில் கேப்டனின் பங்களிப்பு எப்பொழுதுமே மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. களத்தில் கேப்டனின் தந்திரமான முடிவுகள் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
விராட் கோலி இந்திய கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சாதனை மிகவும் பிரபலமானதாகும். உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது சரியாகது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முக்கிய ஐசிசி தொடர்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய இந்திய ஆடும் XI தேர்வு தொடர்ந்து சீராக ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. "விராட் கோலி 2018ன் இடைப்பகுதியில் தாங்கள் நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டறிந்து விட்டோம் என அம்பாத்தி ராயுடுவை தேர்வு செய்தார். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலிய தொடரில் ராயுடுவின் மோசமான ஆட்டத்தால் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
இந்திய அணி நம்பர் 4 பேட்ஸ்மேனிற்கு 10 பேட்ஸ்மேன்களை முயற்சி செய்து பார்த்தது. ஆனால் ஒருவர் கூட தங்களுக்ககு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை. மேலும் இத்தகைய மோசமான பேட்டிங் வரிசையினால் இந்திய அணியை உலகக்கோப்பையில் கடுமையாக பாதித்து அணியின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது.
விராட் கோலிக்கு வெற்றியாக அமைந்த அனைத்து தொடர்களிலும், ஒடிஐ கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வெற்றியை அவரால் இந்திய அணிக்கு அளிக்க இயலவில்லை. ஒவ்வொரு போட்டிகளிலும் ஆடும் XIல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். இது இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. கேதார் ஜாதவை தொடர்ந்து 3 வருடங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடச் செய்துவிட்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்பு அணியிலிருந்து கழட்டி விடுவது இதற்கு சான்றாக எடுத்துரைக்கலாம்.
இதனால் இந்திய அணியின் கேப்டன்ஷீப் மீது அதிக கேள்வி எழுந்து மாற்றம் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு சரியான வீரராக ரோகித் சர்மாவை அனைவரும் தேர்வு செய்துள்ளனர்.
நாம் இங்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்பதற்கான 3 காரணங்களைப் பற்றி காண்போம்.
#3 கேப்டனாக அற்புதமான சாதனைகள்
ரோகித் சர்மா கேப்டனாக சிறந்த சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 4 முறை சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அணியை வழிநடத்தும் போது மிகவும் சாந்தமாகவும், அனைத்து வீரர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வார். அத்துடன் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா நிதஹாஷ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். இவர் 9 ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 8ல் வெற்றி பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா தந்திரமாக செயல்பட்டு விளையாட்டினை நன்கு புரிந்து கொண்டு அணியை வழிநடத்தும் திறமை கொண்டவர். 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் லாசித் மலிங்கா அதிக ரன்களை தன் பௌலிங்கில் அளித்திருந்தாலும், இறுதி ஓவரை அவரிடம் அளித்து ஆட்டத்தின் முடிவை மும்பை இந்தியன்ஸ் வசம் மாற்றினார் ரோகித்.
அனைத்து முறையும் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா முழு பொறுப்பை ஏற்று விளையாடி வருகிறார். கேப்டன்ஷீப் மூலம் ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விளையாடும் திறமை உடையவராக உள்ளார். அத்துடன் அரையிறுதியில் சிறந்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி முக்கியமான கோப்பைகளை வென்றதில்லை. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரு முறை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முக்கியமான ஐசிசி தொடர்களிலும் அரையிறுதி வரை சென்று நெருக்கடியை சமாளிக்க இயலாமல் நூழிலையில் கோப்பையை தவறவிட்டுள்ளார் விராட் கோலி.
#2 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு பல வெற்றியாளர்களை இந்திய அணிக்கு உருவாக்கி அளித்தவர் ரோகித் சர்மா
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தன்னுடைய அற்புதமான கேப்டன்ஷீப் திறமையின் மூலம் இந்திய அணிக்கு பல்வேறு திறமையுள்ள வீரர்களை அடையாளம் கண்டுள்ளார். தற்காலங்களில் வெற்றியாளர்களாக திகழும் ஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா, க்ருநல் பாண்டியா போன்ற வீரர்களை ரோகித் சர்மா அடையாளம் கண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறக்கியுள்ளார்.
ரோகித் சர்மாவின் கேப்டன்ஷீப் திறனை முழுமையாக நம்பி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு துணையாக நின்றது. களத்தில் இவர் எடுக்கும் தந்திரமான முடிவுகள் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற சீசன்களில் அந்த அணியின் பின்னணி வரலாறு மிகவும் அபூர்வமாக இருக்கும். ஆரம்பத்தில் புள்ளிபட்டியலில் கீழே இருந்து பின்னர் படிப்படியாக வெற்றிகளை குவித்து ரசிகர்களின் தவறாக நகைப்பை சிதறடிக்கும் திறன் கொண்ட கேப்டன்ஷீப்பை கொண்டிருப்பவர் ரோகித் சர்மா. ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் ஆடும் XI எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஏதேனும் ஒரு சில மாற்றங்கள் அவ்வப்போது இருக்குமே தவிர, பெரிய மாற்றமிருக்காது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்பொழுதும் ஒரு நிரந்தர ஆட்ட நாயகர்களை கொண்டு விளங்கும். ரோகித் சர்மாவின் சரியான கேப்டன்ஷீப் மூலம் அனைத்து முறையும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழும்.
#1 இம்முடிவால் விராட் கோலி எவ்வித நெருக்கடியும் இன்றி பேட்டிங்கில் கவனம் செலுத்துவார்
விராட் கோலி தற்போதைய தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். விராட் கோலி இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் விருப்புகிறது. கேப்டன்ஷீப்பிலிருந்து தளர்த்தப்பட்டால் விராட் கோலி எவ்வித நெருக்கடியுமின்றி பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி தனது ஆட்டத்தை அதிகம் மேம்படுத்த இயலும். முழு கவனமும் பேட்டிங்கில் இருந்தால் விராட் கோலியை மிஞ்ச உலகில் எந்த பேட்ஸ்மேனும் இல்லை. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் விராட் கோலி, டி20 கிரிக்கெட்டிலும் முதலிடம் வர முயற்சிப்பார்.
கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விராட் கோலியின் பேட்டிங்கில் விராட் கோலியின் மீது எவ்வித கேள்வியும் எழுந்ததில்லை. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே இனைந்து களத்தில் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் பாக்கியமாக ரசிகர்கள் எண்ணுகின்றனர்.
டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி மிகவும் அற்புதமாக தலைமைப் பண்பை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலங்களிலும் இவர்தான் கேப்டனாக டெஸ்ட் அணிக்கு தொடருவார் என தெரிகிறது. ஆனால் ஓடிஐ/டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் ஆளுமைத் திறன் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இதனால் ரோகித் சர்மா இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்க இதுவே தக்க தருணம்.