சமீப காலங்களில் இந்திய அணியின் ஆகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா உருபெற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குறுகிய கால போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றுவரும் ரோகித் சர்மா போட்டிக்கு போட்டி சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 73 என்ற சராசரியை வைத்துள்ள ரோகித் சர்மா, இந்த ஆண்டு 57 என்ற சராசரியை கொண்டுள்ளார். 2019 உலக கோப்பை தொடரில் பத்து இன்னிங்சில் களம் இறங்கி 648 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகித்தார். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்க கூடிய வீரராகவும் திகழ்ந்துள்ளார். தமது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலங்களில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டு அதன்பின்னர், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியதிலிருந்து தனது அசுர வேக சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எனவே, சர்வதேச குறுகிய கால போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா திகழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்திருக்கின்றது.
#3.சாதனைகளை படைப்பதில் கொண்ட ஆர்வம்:
2007ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் கண்ட ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் ஓரளவுக்கு நம்பிக்கையையும் அளித்துள்ளார். அதன் பின்னர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் தொடரில் கூட சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார், ரோகித் சர்மா. தொடர்ந்து இந்திய அணியில் தனது இடத்தை அவ்வப்போது பறி கொடுத்து வந்துள்ளார். 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டது முதல் இன்று வரை அயராது பாடுபட்டு வருகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 என்ற சராசரியுடன் 27 சதங்களை விளாசி உள்ளார், ரோகித். மேலும், அதிக ஒரு நாள் சதங்களை கொண்டுள்ள இந்தியர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளை போலவே டி20 போட்டிகளிலும் தமது ஆக்ரோஷ பாணியை கடைபிடிக்கும் ரோகித் சர்மா, 136 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டு மலைக்க வைத்துள்ளார். டி20 போட்டிகளில் எத்தகைய வீரரும் புரியாத சாதனையான 4 சதங்களை இவர் விளாசியுள்ளார் என்பது மற்றுமொரு சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல், இவ்வகை போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேனும் இவரே. டி20 வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வலது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கூட ரோஹித் சர்மா கொண்டுள்ளார்.