ஜனவரி 31 அன்று நியூசிலாந்தின் ஹில்டன் நகரில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவிற்கு 200வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களின் வரலாற்று புத்தகத்தில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார் ரோகித் சர்மா.
விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தற்போது இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரட்டை சதத்திற்கு பெயர் பெற்ற ரோகித் சர்மா தனது 200வது ஒருநாள் போட்டியில் இன்று ஜனவரி 31 அன்று நியூசிலாந்திற்கு எதிரான 4வது போட்டியில் பங்கேற்றார். இதுவரை இந்திய அணியில் 13 வீரர்கள் 200 ஓடிஐ போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ரோகித் சர்மா 14வது இந்திய வீரராக இந்த பட்டியலில் இனைந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாள் அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இவர் இதுவரை 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 47.88 சராசரியுடன் 39 அரைசதங்கள் மற்றும் 22 சதங்களுடன் 7806 ரன்களை குவித்துள்ளார்.
தற்போது நியுசிலாந்திற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 160 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக ஹமில்டனில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் ஆடுகளம் ஸ்விங் பௌலிங்கிற்கு சாதகமாக இருந்ததால் ரோகித் சர்மா 7 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்து வலிமையான இந்திய அணியின் பேட்டிங் லைன்-அப்பை தனது அதிரடி பௌலிங்கால் 92 ரன்களில் சுருட்டியது. மொத்தமாக 30.5 ஓவர்கள் இந்திய அணி எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. ரோகித் கேப்டனாக நியூசிலாந்திற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், எம்.எஸ்.தோனி, கங்குலி , முகமது அசாருதீன் ஆகியோர் உள்ளனர்.

200 ஓடிஐ போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள போட்டிகள் சர்வதேச ஒருநாள் போட்டிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது சில வீரர்கள் ஆசிய XI மற்றும் உலக XI போன்ற அணிகளில் இடம்பெற்று விளையாடியுள்ளனர். அந்த போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள்
#1.சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகள்
#2.ராகுல் டிராவிட் - 340 போட்டிகள்
#3.முகமது அசாருதீன் - 334 போட்டிகள்
#4.எம்.எஸ்.தோனி - 334 போட்டிகள்
#5.கங்குலி - 308 போட்டிகள்
#6.யுவராஜ் சிங். - 301 போட்டிகள்
#7.அணில் கும்ளே. - 269 போட்டிகள்
#8.விரேந்திர சேவாக் - 241 போட்டிகள்
#9.ஹர்பஜன் சிங். - 234 போட்டிகள்
#10.ஜவகல் ஶ்ரீ நாத். - 229 போட்டிகள்
#11.சுரேஷ் ரெய்னா. - 226 போட்டிகள்
#12.கபில் தேவ். - 225 போட்டிகள்
#13.விராட் கோலி. - 222 போட்டிகள்
#14.ரோகித் சர்மா - 200 போட்டிகள்