இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சதத்தின் மூலம் சச்சின் மற்றும் கோலி ஆகியோரின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த சாதனையை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இலங்கை அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சதம் விளாசி 137 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த சதத்தின் மூலம் தனது 20வது சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமில்லாமல் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற புதிய பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக ஒருநாள் போட்டிகளில் 5௦ அல்லது அதற்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேன்கள் கோலி, சச்சினின் சாதனைகளை முறியடித்துள்ளார். இந்திய அணியில் கோலி மற்றும் சச்சின் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் 50க்கும் மேலான ரன்களை அடித்து இந்த சாதனையை வைத்திருந்தனர். இப்போது புதிதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை குவித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
எனினும், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் ஆவார். அவர் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை அடித்துள்ளார். அவரை எட்ட ராஸ் டெய்லர் இன்னும் மூன்று போட்டிகளில் அரைசதம் அடிக்க வேண்டும். அதுவும் நம் இந்திய அணிக்கு எதிராக அடிக்க வேண்டும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்தவுடன் , இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. அந்தத் தொடரில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடர்ந்து மூன்று அரை சதங்களை விளாசினால் , தொடர்ந்து 9 போட்டிகளில் ஐம்பதுக்கும் மேலான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைப்பார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை வென்றால் , புதிய நம்பிக்கையுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். அது மட்டுமின்றி இந்திய அணியில் தலைசிறந்த பவுலர்கள் உள்ளனர். அவர்களை எதிர்த்து இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடிப்பது என்றால் சற்று கடினம் தான். இருந்தாலும் சச்சின் மற்றும் கோலியின் சாதனையை முறியடித்த புத்துணர்ச்சியில் இருப்பார் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று அரை சதங்களை விளாசி புதிய உலக சாதனையை படைப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.