தென் ஆப்ரிக்காவிற்கு சற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முதலில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாளில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 235 ரன்களை சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் டி காக் 80 ரன்களை எடுத்தார். அதன் பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றதுடன் தொடங்கி அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை சேர்த்து முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்களை இழந்திருந்தது.
இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டுப் ப்ளாஸிஸ் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி டுப் ப்ளாஸிஸ் மற்றும் டி காக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த இணையின் நிலையான ஆட்டத்தால் சற்று ரன் குவிப்பில் ஈடுபட்டது தென் ஆப்ரிக்கா அணி. டி காக் தனது அரை சதத்தை கடந்த நிலையில் 55 ரன்னில் லசித் அம்புலடேனிய பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய பிளாண்டர் 18 ரன்னில் லசித் அம்புலடேனிய பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மகாராஜா 4 ரன்னில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ராபாடா டக் அவுட் ஆக நிலைத்து விளையாடிய கேப்டன் டுப் ப்ளாஸிஸ் 90 ரன்னில் விஷ்வா பெர்னாண்டோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஸ்டைன் 1 ரன்னில் விஷ்வா பந்தில் அவுட் ஆக தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்களை எடுத்தது. இலங்கை அணிக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா அணி.
இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான கருணாரத்னே மற்றும் திரிமனே இருவரும் களம் இறங்கினர். திரிமனே 20 ரன்னில் பிளாண்டர் பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணியின் ஒஷாடா பெர்னாண்டோ களம் இறங்கினார். அதனை அடுத்து நிலைத்து விளையாடிய கருணாரத்னே 21 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த குஷல் மென்டிஸ் ஒலிவேர் பந்தில் டக் அவுட் ஆகினார்.
அவரை தொடர்ந்து களம் இறங்கிய குஷல் பெரேரா 12 ரன்கள் எடுத்து முன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 83-3 ரன்களை எடுத்தது. இன்னும் 221 ரன்கள் இலங்கை அணிக்கு தேவைப்படும் நிலையில் தென் ஆப்ரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!