பாகிஸ்தான் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று துவங்கியது. டாசில் வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் ‘பாப் டுபிலிசிஸ்’ தனது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் மேல் முழு நம்பிக்கை வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ‘இமாம் உல் ஹுக்’ 8 ரன்களிலும், ‘பக்கர் ஜமான்’ 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அசார் அலி 2 ரன்னிலும், ஆசாத் ஷபிக் 20 ரன்களிலும், பாபர் ஆசம் 2 ரன்களிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர். 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி பரிதவித்தது.
இந்நிலையில் ஷான் மசூத் உடன் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது இணைந்தார். இந்த இணை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்கள் சேர்த்தனர். மசூத் நிதானமாக ஆட, கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி நம்பிக்கை அளித்தார். 6வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரபடா பிரித்தார்.
44 ரன்கள் சேர்த்த நிலையில் மசூத் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரை சதம் அடித்த கேப்டன் சர்ப்ராஸ் அகமது 56 ரன்கள் சேர்த்த நிலையில் ஆலிவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 51.1 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முகமது ஆமீர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆலிவர் 4 விக்கெட்டுகளும், ஸ்டெய்ன் 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளையும், பிலாண்டர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடக்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டீன் எல்கர் உம், மார்க்கரமும் இணைந்து நல்ல தொடக்கத்தை உருவாக்கினர். 20 ரன்கள் சேர்த்த நிலையில் டீன் எல்கர் அமீரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆம்லா, மார்க்கமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய மார்க்கரம் தனது 4வது டெஸ்ட் அரை சதத்தை கடந்தார்.
இந்நிலையில் ஆட்ட நேரம் முடியும் கடைசி பந்தில் மார்க்கரம் பகுதிநேர பந்துவீச்சாளர் மசூத் இன் பந்துவீச்சில் போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். அத்துடன் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தது. ஆம்லா 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் தரப்பில் ஆமீர் மற்றும் மசூத் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
54 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை நாளை துவங்கும். கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் நல்ல முன்னிலை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுப்பார்களா இல்லையா என்பதை நாளை பார்ப்போம்.
.