தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 56 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஆலிவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய தென்னாபிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 20 ரன்களையும், மார்க்ரம் 78 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடந்தது. ஆம்லா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் முந்தைய நாள் ஸ்கோரான 24 ரன்களுடன் ‘முகமது அப்பாஸ்’ பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ‘டீ பிரியுன்’ 13 ரன்களில் ‘சாஹ்ரீன் அப்ரிடி’ பந்துவீச்சில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்கா 149/4 என லேசான தடுமாற்றத்தை சந்தித்தது.

இதன் பின்னர் கேப்டன் ‘டு பிளிசிஸ்’ உடன் ‘தெம்பா பவுமா’ இணைந்தார். இந்த இணை பாகிஸ்தான் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்கள் சேர்த்தனர். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ‘டக் அவுட்’ ஆகி ஏமாற்றமளித்த கேப்டன் ‘டு பிளிசிஸ் இந்த ஆட்டத்தில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 18 ஆவது டெஸ்ட் அரைசதத்தை கடந்தார்.
மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவுமா தனது பதிமூன்றாவது டெஸ்ட் அரை சதத்தை கடந்தார். இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்து இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோர் 305 ஆக இருக்கும்போது முடிவுக்கு வந்தது. சிறப்பாக ஆடி வந்த பவுமா 75 ரன்களில் சஹிரீன் அப்ரிடி பந்து வீச்சில் கேப்டன் சர்பிராஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ‘டு பளிசிஸ்’ 97 ரன்களில் கொடுத்த எளிதான கேட்சை சர்ப்ராஸ் அகமது கோட்டை விட, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட டு பிளிசிஸ் ஆமீர் பந்து வீச்சில் 3 ரன்கள் எடுத்து தனது 9 வது டெஸ்ட் சதத்தை எட்டினார். அவருடன் இணைந்த விக்கெட் கீப்பர் ‘டீ காக்’ துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் முன்னிலை 150 ரன்களை கடந்தது.
இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டு பிளிசிஸ் 102 ரன்களில் சாஹ்ரீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அம்பையர் முதலில் அவுட் கொடுக்க மறுத்தாலும் சர்ப்ராஸ் அகமது ரிவியூ முறையில் இந்த முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.
சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிய டீ காக் 50 ரன்களை கடக்க, தென் ஆபிரிக்காவின் முன்னிலை 200 ரன்களை கடந்தது.

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் சேர்த்துள்ளது. டீ காக் 55 ரன்களுடனும், பிலான்தர் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் சஹ்ரீன் அப்ரிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 205 ரன்கள் முன்னிலை பெற்று மிக வலுவான நிலையில் உள்ளது. 3ம் நாள் ஆட்டம் நாளை தொடர்ந்து நடைபெறும்.