தென் ஆப்ரிக்கா மண்ணில் முதன் முதலாக தொடரை வென்று அசத்திய இலங்கை அணி!!!

Pravin
இலங்கை அணி வீரர்கள் வெற்றி உற்சாகத்தில்
இலங்கை அணி வீரர்கள் வெற்றி உற்சாகத்தில்

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 304 ரன்கள் என்ற இலக்கை எட்டி, இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் சேசிங் செய்த ரன்களில் இது நான்காவது இடத்தை பெற்றது. தென் ஆப்ரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று அசத்திய நிலையில் கடந்த 21ம் தேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிஸபெத் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி சற்று மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தொடக்கத்தில் தடுமாறிய தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களை எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணியில் டி காக் மட்டும் 86 ரன்கள் அடித்தார்.

இதை அடுத்து விளையாடிய இலங்கை அணியில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 154 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 68 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை மீண்டும் வெளிபடுத்தியது. இதனால் அடுத்தடுத்து அனைத்து வீரர்களும் அவுட் ஆகி வெளியேறினர். இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா அணி 128 ரன்களை அடித்தது. தென் ஆப்ரிக்கா அணியில் கேப்டன் டுப் பிளாஸிஸ் மட்டும் அரை சதம் அடித்தார். இலங்கை அணிக்கு தென் ஆப்ரிக்கா அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

குசால் மேன்டிஸ்
குசால் மேன்டிஸ்

இதை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் சிறிது நேரத்திலேயே விக்கெட்களை இழந்து வெளியேற இலங்கை அணி தடுமாறியது. எனினும் அடுத்து களம் இறங்கிய ஒஷாடா பெர்னாண்டோ மற்றும் குசால் மென்டிஸ் இருவரும் நிலைத்து விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தடுமாறியது தென் ஆப்ரிக்கா அணியினர். இருவரும் அரைசதங்கள் அடித்து அசத்தினர். நிலைத்து விளையாடிய ஒஷாடா பெர்னாண்டோ 75 ரன்கள் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய குசால் பெரேரா 84 ரன்களை அடித்தார். இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணியை வென்றது.

குசால் பெரேரா
குசால் பெரேரா

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் முலம் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை. இந்த தொடரை வென்றதன் முலம், முதன் முதலாக தென் ஆப்ரிக்கா மண்ணில் தொடரை வென்ற ஆசிய அணி என்ற சாதனையை இலங்கை அணி பெற்றது. இந்த தொடர் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி தொடராக அமைந்துள்ளது. இதுவரை தென் ஆப்ரிக்கா மண்ணில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும் இங்கிலாந்து அணி இரண்டு முறையும் தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் நாயகனாக குசால் பெரேரா மற்றும் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக குசால் மென்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Edited by Fambeat Tamil