இலங்கை அணி தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுப்யணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் தென்னாப்ரிக்கா அணி கைப்பற்றி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 10) டர்பனில் துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாப்ரிக்க அணியின் துவக்க வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.தென்னாப்ரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. உடானா வீசிய ஆறாவது ஓவரில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஹென்ட்ரிக்ஸ். பின்னர் களமிறங்கினார் அணியின் கேப்டன் டூபிளசிஸ். இவர் டீ காக் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய டூ பிளசிஸ் 27 பந்துகளில் 36 ரன்களை குவித்து மலிங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துஸ்ஸுன் களமிறங்கினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்தார் டீ காக். அதிரடியாக ரன்களை குவித்த டீ காக் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 14வது சதத்தினை பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 121 ரன்னில் ரஜிதா பந்தில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து துஸ்ஸுன் 50 ரன்களிலும், ப்ரிட்டோரிஸ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் மில்லர் மற்றும் பிக்லிவாயோ-வின் அதிரடியில் தென்னாப்ரிக்க அணி 331 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் உடானா 2 விக்கெட்டுகளும், மலிங்கா, குசால் மென்டிஸ் , ரஜிதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னால்டோ மற்றும் டிக்கிவாலா களமிறங்கினர். மூன்றாவது ஓவரிலேயே டிக்கிவாலா 2 ரன்களில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான அவிஷ்கா பெர்னால்டோவும் 23 ரன்களில் வெளியேற இலங்கை அணி தடுமாறியது. அடுத்து வந்த ஒசாடா பெர்னால்டோ மற்றும் குசால் மென்டிஸ் ஜோடி சேர்ந்தனர். குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆட மறுமுனையில் ஒசாடா பெர்னால்டோ நிதானமாக விளையாடி வந்தார்.
இந்நிலையில் ஆட்டத்தில் பாதியிலேயே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நீண்ட நேரம் நீடித்ததால் டிஎல்எஸ் முறைப்படி போட்டியின் ஓவர் குறைக்கப்பட்டது. இதன்மூலம் 24 ஓவருக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி அதிரடியாக விளையாடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் இலங்கை வீரர்களோ அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் இலங்கை அணி 24 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தென்னாப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதிரடியாக விளையாடி சதமடித்த தென்னாப்ரிக்க வீரர் குயின்டன் டீ காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.