சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் உலகின் ஆல்-டைம் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உலகக்கோப்பையில் பல மைல்கல்லை அடைந்துள்ளார். உலகக்கோப்பையில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தினால் பல புகழ் அந்த வீரருக்கு வந்துசேரும் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் மிகுந்த கவனத்துடன் தங்களது உலகக்கோப்பையில் விளையாடுவார்கள். உலகின் மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவதின் மூலம் ஒரு வீரரின் புகழ் இரு மடங்காக உயரும். உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் தனது நாட்டிற்காக கோப்பையை வெல்லும் நோக்கில் இரு நூற்றாண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இரு உலகக்கோப்பை தொடர்களின் இறுதி போட்டியில் (2003 & 2011 உலகக்கோப்பை) மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். ஆனால் அந்த உலகக்கோப்பை தொடர்களின் தகுதிச் சுற்று, அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளதை யாரும் மறக்க மாட்டார்கள். சச்சினின் நீண்ட கால கனவு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். ஆனால் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 22 வருடங்கள் கழித்துதான் ஒரேயொரு முறை உலகக்கோப்பையை இந்தியா 2011ல் வென்றது.
நாம் இங்கு "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட வருடங்கள் ஆனாலும் தற்போது வரை உலகக்கோப்பை வரலாற்றில் அவரது கட்டுபாட்டில் இருக்கும் 4 சாதனைகளை பற்றி காண்போம்.
#4 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர், உலகக்கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்களை குவித்துள்ளார். 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் 57 சராசரி மற்றும் 88 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2278 ரன்களை குவித்துள்ளார்.
இவர் 1996, 2003, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் உலகக்கோப்பையில் பேட்டிங் செய்வதை மிகவும் விருப்பப்பட்டு விளையாடினார், ஆனால் 2007 உலகக்கோப்பை இவருக்கு மோசமானதாக அமைந்தது. இவரது ஆச்சரியமூட்டும் சொதப்பலிற்கு காரணம், இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கியதுதான். இவர் இந்த பேட்டிங் வரிசையில் பயங்கரமாக சொதப்பினார்.
1996 உலகக்கோப்பை தொடரில் 523 ரன்களும், 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்களும் மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் 482 ரன்களையும் குவித்தார். இம்மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை குவித்தவர் "லிட்டில் மாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர். இவர் விளையாடிய மற்ற உலகக் கோப்பை சீசன்களான 1992, 1999, 2007 ஆகிய தொடர்களில் இவர் அடித்த ரன்கள் முறையே 283, 253, 64 ஆகும்.
#3 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 49 சதங்களை குவித்து அதிக சதங்ளை விளாசியவர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள சச்சின் டெண்டுல்கர், தான் விளையாடிய 6 உலகக்கோப்பை தொடர்களில் அதிக சதங்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 1992 உலகக்கோப்பை தொடரில் அறிமுகமான இவர் 1996 உலகக்கோப்பை தொடரில் கட்டாக்கில் நடந்த கென்யாவிற்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தினை விளாசினார்.
அத்துடன் அதே உலகக்கோப்பை சீசனில் இலங்கைக்கு எதிராக மற்றொரு சதத்தினை அடித்தார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் எதிர்பாராத விதமாக அப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 1999ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் கென்யாவிற்கு எதிராக ஒரேயொரு சதம் மட்டுமே அடித்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போட்டியில் 101 பந்துகளில் 140 ரன்களை குவித்து 329 என்ற அதிக இலக்கை இந்தியா குவிக்க உதவி செய்தார். இவர் உலகக்கோப்பையில் அடித்துள்ள 6 சதங்களுள் 3 சதங்கள் குறிப்பிடப்பட வேண்டியன ஆகும். ஏனெனில் இவர் உலகக்கோப்பையில் இருமுறை சதம் விளாசியபோது இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. 2011ல் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஒருமுறை டிரா ஆகியுள்ளது.
#2 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருது
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்து ஒரு பெரிய அடித்தளத்தை கிரிக்கெட்டில் அமைத்துள்ளார். "கிரிக்கெட் கடவுள்" என்று ரசிகர்களால் அன்போடு அழைப்படும் சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் (9) விருதுகளை வென்றுள்ளார். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று 60ற்கும் மேலான கோப்பைகளை வைத்துள்ளார்.
லெஜன்ட்ரி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் விருப்பமான எதிரணியாக பாகிஸ்தானிற்கு எதிராக 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதுவே உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச ஆட்டநாயகன் விருதாகும். 2003 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக சச்சினின் மேட்ச் வின்னிங் ரன்களான 98 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் அதே எதிரணியுடன் அவர் அடித்த 85 ரன்கள் ஆகியன உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கரின் சிறந்த ஆட்டத்திறனிற்கு உதாரணங்களாகும்.
#1 ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள்
"மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டாவது உலகக் கோப்பை தொடரான 2003ல் சச்சின் டெண்டுல்கர் எட்டினார். 2003 உலகக்கோப்பை தொடரில் 60 சராசரி மற்றும் 89 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 673 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் நமிபியா அணிக்கு எதிராக 152 ரன்களை விளாசினார். இந்த உலகக் கோப்பை தொடரில் இவரது சிறந்த ஆட்டம் இது மட்டுமே ஆகும்.
அத்துடன் 6 அரைசதங்கள் மற்றும் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக 90+ ரன்கள் ஆகியவற்றை குவித்தார். சச்சின் விளையாடிய 6 உலகக்கோப்பை சீசனில் 2003 மிகவும் சிறந்ததாக அமைந்தது. பாகிஸ்தானிற்கு எதிராக 276 என்ற இலக்கை அதிக நெருக்கடியில் சேஸ் செய்து கொண்டிருந்த இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்களை வாஸிம் அக்ரம், சோயிப் அக்தர், வஹார் யோனிஷ் போன்ற மின்னல் வேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 2003ல் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சச்சினின் ஆசை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோல்வியடைந்து நிறைவேறாமல் போனது. அதன்பின் 8 வருடங்களுக்கு பிறகு 2011ல் சச்சின் டெண்டுல்கரின் கனவு நனவானது. அத்துடன் அந்த உலகக்கோப்பை சச்சின் டெண்டுல்கரின் பிரிவு உபசார தொடராகவும் இருந்தது.