சச்சின் என்றாலே தெரியாத யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாத மக்களுக்கும் சச்சினை நன்கு தெரியும் . அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்துள்ளார். அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சின் தனது வாழ்க்கையில் சிறுவயதில் சந்தித்த நிகழ்வு பற்றி நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார் .
இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சச்சின் கூறியதாவது:
நான் சிறுவயதில் பல இடங்களில் அசிங்கப்பட்டிருக்கிறேன். இருப்பினும் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முதலில் நடந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையை பற்றி கூற விரும்புகிறேன்.
"நான் சிறு வயதில் ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு கோடை விடுமுறையின்போது கிரிக்கெட் பயிற்சிக்காக குடும்பத்தார் என்னை சேர்த்துவிட்டனர். அப்போது எனக்கு 11 வயது. முதன் முதலில் அப்போதுதான், கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டேன். நான் ஆடுவதை பார்க்க எனது வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். கை தட்டி உற்சாகப்படுத்தினர். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால், நான் சந்தித்த முதல் பந்திலேயே பௌல்ட் ஆகி வெளியேறினேன். நான் வெளியே வந்தபோது எனது நண்பர்கள் எனக்கு கை தட்ட வேண்டுமா, ஆறுதல் சொல்ல வேண்டுமா என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தனர். அது எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது. எனக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய தருணம் அது.
இருப்பினும், அந்த பந்து மிகவும் தாழ்வாக வந்ததால் பௌல்ட் ஆகிவிட்டதாகவும், எழுந்து வந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன் என்றும் நண்பர்களிடம் கூறி சமாளித்தேன். இதையடுத்து அடுத்த போட்டியில் கொஞ்சம் முன்னேறினேன். முதல் பந்தை தடுத்துக்கொண்டேன். ஆனால், கொடுமை என்னவென்றால், அடுத்த பந்தில் பௌல்ட் ஆகிவிட்டேன். அடுத்த போட்டியில் சிங்கிள் ரன் எடுத்து அதன்பிறகு அவுட் ஆனேன். ஆக மொத்தம் கிரிக்கெட் பந்தில் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் நான் எடுத்த மொத்த ரன் 1 மட்டுமே. ஆனால், காலரை தூக்கிவிட்டபடி, பார்த்தாயா, நான் 1 ரன் எடுத்துவிட்டேன் என்று கூறியபடி சமாளித்தேன். நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். வாழ்க்கையில் பயணத்தை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. பயணத்தை எப்படி பூர்த்தி செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
இன்று சச்சின் உலகம் போற்றும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். ஆனால் அவரை டக்-அவுட் செய்த பவுலர்கள் என்ன ஆனார்கள் என்பதை உலகம் கவனிக்கவில்லை. தொடர்ந்து அவுட் ஆனபோது, நம்பிக்கையை இழந்து சச்சின் கிரிக்கெட்டே வேண்டாம் என்று நடையை கட்டியிருந்தால், இன்று உலக கிரிக்கெட்டுக்கு ஒரு நாயகன் கிடைக்காமல் போயிருக்க கூடும். சிறு வயதில் ஏற்பட்ட அசிங்கங்களை எண்ணி வருத்தப்பட்டிருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சச்சின் என்ற ஒருவர் இல்லாமல் போகிருக்கும். உலக கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்களை அடித்து சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் மட்டுமே. அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சினின் வாழ்க்கை முறை வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.