உலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தனது வாழ்க்கையை கிரிக்கெட்டிற்காக செலவழித்துள்ளார், 'லிட்டில் மாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர். இந்தியாவுக்காக அவர் ஆறு உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்பவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். உலகக் கோப்பையில் அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் மற்றும் சாதனைகள் பற்றிய தொகுப்பை காணலாம்.

1996 இல் இலங்கைக்கு எதிராக

1996 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் கண்களுக்கு விருந்து படைக்க கூடியதாக அமைந்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தார். சச்சின் சதம் அடித்து அசத்திய போதிலும் அந்த போட்டியில் துரதிஷ்டவசமாக இந்திய அணி தோல்வியடைந்தது.

2003 இல் பாகிஸ்தானுக்கு எதிராக

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய இந்திய அணிக்கு பக்கபலமாக விளங்கியவர் சச்சின். அந்த தொடரில் 673 ரன்கள் குவித்து அசத்தினார். இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சச்சின் இந்திய அணிக்காக உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத கிளாசிக் ஆட்டங்களில் ஒன்றை விளையாடினார். பாகிஸ்தானின் அணீயின் சுல்தான்கள் என வர்ணிக்கபடும் ஷாகிப் அக்தர், வாக்கார் யூனுஸ், வாசிம் அக்ரம் ஆகியோரின் பந்து வீச்சை அனாயசமாக எதிர்கொண்ட சச்சின் அதிரடியாக ஆடி 98 ரன்கள் குவித்தார்.

2011 இல் இங்கிலாந்துக்கு எதிராக

2011 இல் இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி காலத்தில் இருந்தார் சச்சின். அந்த தொடரில் யுவராஜ், ரெய்னா போன்ற இளம் வீரர்களுக்கு சற்றும் சளைக்காமல் விளையாடிய சச்சின் 482 ரன்களை குவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் பொறுப்புடன் விளையாடிய டெண்டுல்கர் சதம் அடித்தார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த இந்த போட்டி யாரும் எதிர்பாராத வகையில் டையில் முடிந்தது.

உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனைகள்

ஆறு உலகக் கோப்பைகளில் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக 44 இன்னிங்சில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பையில் தனி நபராக அதிக எண்ணிக்கையிலான இன்னிங்ஸ் விளையாடிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆவார்.
சச்சின் டெண்டுல்கர் 15 அரைசதங்கள் மற்றும் ஆறு சதங்கள் என உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 21 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பையில் 200 க்கும் அதிகமான பவுண்டரிகள் அடித்த ஒரே வீரர் ஆவார். மாஸ்டர் பிளாஸ்டர் விளையாடிய 45 போட்டிகளில், அவர் 241 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
2003 உலகக் கோப்பைத் தொடரில் சச்சின் 673 ரன்கள் குவித்து அசத்தினார். உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார்.
உலக கோப்பை தொடர்களில் 45 போட்டிகளில் விளையாடி இருக்கும் சச்சின் சராசரியாக 56.95 என்ற ரன் விகிதத்தில் 2278 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 6 சதங்களும், 15 அரை சதங்களும் அடங்கும். அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மகுடத்தை சச்சினிடம் இருந்து அவ்வளவு சீக்கிரம் பறித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

Quick Links

App download animated image Get the free App now