எம்.எஸ்.தோனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் விக்கெட் கீப்பராக யாரை ஆட வைப்பது என்று கேள்வி வந்தபோது அனைவரின் மனதிலும் உதித்த ஒரே பெயர் விருத்திமான் சஹா. ஐபிஎல் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்த சஹா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முத்திரைப் பதித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஓரளவு சிறப்பாக ஆடி வந்த விருத்திமான் சஹாவுக்கு கடந்த வருடம் மே மாதம் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னரே இவரது இடத்திற்கு ரிஷாப் பாண்ட் வந்தார்.
இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பாண்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த தற்போது தேர்வாளர்களின் நம்பிக்கைக்குரிய வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷாப் பாண்ட் இருக்கிறார். இதனால் விருத்திமான் சஹாவுக்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து சுமார் 8 மாத காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த சஹா நாளை தொடங்க உள்ள ‘சையது முஷ்டாக் அலி’ கோப்பை தொடரில் ‘பெங்கால்’ அணிக்காக களம் இறங்க உள்ளார்.
இந்நிலையில் விருத்திமான் சஹா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “காயத்திலிருந்து மீண்டு வந்து மறுபடியும் விளையாட போவதை நினைக்கும் பொழுது உண்மையிலேயே மிகவும் சிறப்பாக உள்ளது. காயத்தினால் நான் ஒன்றும் நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கவில்லை இது ஒரு சிறிய இடைவெளிதான்” என்றார்.
“தற்போது என்னுடைய கவனம் முழுவதும் பெங்கால் அணிக்காக ‘சையது முஷ்டாக் அலி’ கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. நான் காயத்தால் விலகிய பிறகு ரிஷாப் பாண்ட் என்னுடைய இடத்தை அவருடைய இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ஆனால் நான் அவர் எனது போட்டியாளராக கருதவில்லை. சமீபத்தில்கூட நாங்கள் சந்தித்து நீண்ட நேரம் பேசினோம் அது ஒரு சிறப்பான சந்திப்பாக அமைந்தது”.
மேலும் சஹா கூறுகையில், “இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேனா இல்லையா என்பது எனது கையில் இல்லை. என்னுடைய வேலை என்னால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடி எனது அணிக்கு வெற்றியை தேடித் தருவதே. அதில்தான் என்னுடைய கவனம் உள்ளது. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ‘சரித்திர வெற்றி’ (2-1 என ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி) பெற்ற அந்த தொடரில் இந்திய அணிக்காக என்னால் பங்களிப்பு செய்ய முடியாமல் போனது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக இருந்தது”.
“காயத்திற்குப் பிறகு நான் நீண்ட நேரம் வலைப்பயிற்சி மேற்கொண்டேன். என்னுடைய பேட்டிங் எனக்கு இயல்பாகவே தெரிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடுவது போன்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை. இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”. இவ்வாறு விருத்திமான் சஹா தெரிவித்தார்.
காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் விருத்திமான் சஹா மீண்டும் தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.