பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இனவெறியைத் தூண்டும் விதமாக பேசினார். தற்போது அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அவரை மன்னித்து விடுகிறோம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. அந்த ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றது அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 22ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 45 ஆவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹசன் அலி அரை சதம் விளாசினார். தென்னாபிரிக்க அணியில் சிறப்பாக பந்து வீசிய பெலுகுவாயோ தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. இந்த இலக்கை 42வது ஓவரின் முடிவில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. சிறப்பாக விளையாடிய வாண்டர் டஸ்சென் 80 ரன்களை விளாசினார். மேலும் பெலுகுவாயோ அரை சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் அரை சதமும் விளாசிய தென் ஆப்பிரிக்க அணியின் பெலுகுவாயோ ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் பெலுகுவாயோ பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன்னோடைய அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என உருதுவில் பேசியுள்ளார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அகமதுவின் இந்த இனவெறி பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இவரது இந்த இனவெறி பேச்சுகளை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை. யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இனி இதுப் போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இவர் மன்னிப்பு கேட்டதால் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் கூறியது என்ன என்றால், இவரை நாங்கள் மன்னித்து விடுகிறோம். நீங்கள் தென்னாபிரிக்காவிற்கு வந்து விளையாடும் போது எச்சரிக்கையாக பேச வேண்டும் நாங்கள் மன்னித்து விட்டதால் இந்த விஷயத்தை சாதரணமாக எடுத்துக் கொண்டோம் என்று நினைத்து விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.