பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இனவெறியை தூண்டும் விதமாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த சர்ச்சையால் தற்போது இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புது கேப்டனை நியமித்துள்ளது. இந்த சர்ச்சையை பற்றியும், அந்த புது கேப்டன் யார் என்பதை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.
2015ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கு பின்னர் மிஸ்பா உல் ஹக் தனது ஓய்வை அறிவித்து விட்டார். இந்நிலையில் யாரை கேப்டனாக நியமிப்பது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திணறியது. அந்த சமயத்தில் அசார் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கு பின்னர் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதியது. அந்த தொடரில் சர்பராஸ் அஹமது மிகச் சிறப்பாக விளையாடினார். அந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்தார். வெறும் 28 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையையும் அந்த தொடரில் படைத்தார்.
இந்நிலையில் இவரது சிறப்பான பங்களிப்பினை பார்த்து துணை கேப்டனாக இருந்த சர்ப்ராஸ் அகமதுவை கேப்டனாக நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதன்பின்பு 2015 ஆம் வருடம் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த தொடரை சர்ப்ராஸ் அகமதுவின் தலைமையில் வென்றது பாகிஸ்தான் அணி. அன்று முதல் இந்த 2019ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்கு சிறந்த கேப்டனாக விளங்கியவர் சர்ப்ராஸ் அகமது.
தற்போது பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளது. மற்ற இரு ஒருநாள் போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 22ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பெலுகுவாயோ பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன்னோடைய அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என உருதுவில் பேசியுள்ளார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அகமதுவின் இந்த இனவெறி பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இவரது இந்த இனவெறி பேச்சுகளை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை. யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இனி இதுப் போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
தற்போது ஐசிசி இவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இவரை 4 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. எனவே இந்த தொடரில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். எனவே அடுத்த நான்கு போட்டிகளுக்கு ஷோயிப் மாலிக்கை கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
அதே சமயத்தில் சோயிப் மாலிக்கும் சிறந்த பேட்ஸ்மென் தான். இவர் பாகிஸ்தான் அணியில் பல வருடங்களாக விளையாடி வருகிறார். இவரும் பாகிஸ்தான் அணிக்கு பகுதிநேர கேப்டனாக பலமுறை இருந்துள்ளார். தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர் என்றால் சோயிப் மாலிக் தான். குறிப்பாக கடந்த 2018 ஆம் வருடத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோயிப் மாலிக் மிகச் சிறப்பாக விளையாடினார். எனவே சர்பராஸ் அஹமது இல்லாத காரணத்தினால் தற்போது சோயிப் மாலிக்கை கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
சர்ப்பிராஸ் அகமதுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதும், அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி கொடுக்கபடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.