தற்போது நமது இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு பஞ்சமில்லை. இந்த இளம் வீரர்கள் குறைந்த வயதிலேயே பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். மூத்த வீரர்களுக்கு இணையாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆவதால், அதில் ரன்கள் அடிப்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் இந்த கடினமான டெஸ்ட் போட்டிகளில் கூட, பல திறமையான வீரர்கள், இளம் வயதிலேயே தங்களது முதல் சதத்தை பதிவு செய்துள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) சச்சின் டெண்டுல்கர் ( 17 வயதில் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சாதனை நாயகன் சச்சின். தனது சிறப்பான விளையாட்டின் மூலம் உலகில் பல ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் மிக குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து, நம் இந்திய அணிக்கு பெருமை சேர்த்து சென்றுள்ளார். டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய இரண்டு வித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 1990 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது சச்சினுக்கு வயது, வெறும் 17 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) பிரித்திவி ஷாவ் ( 18 வயதில் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான பிரித்திவி ஷாவ். இவர் “அண்டர் -19” உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அந்தக் உலகக் கோப்பைத் தொடரில், இவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் வருடம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரிதிவி ஷாவ் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி 134 ரன்கள் விளாசினார். இந்த சதத்தை அடித்த போது இவருக்கு வயது வெறும் 18 தான்.
#3) ரிஷப் பண்ட் ( 20 வயதில் )
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான ரிஷப் பண்ட். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அணியில் இவரை தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டிகளில் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தற்போது பிடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் விளாசினார். இந்த சதத்தின் மூலம் இளம் வயதிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்த, மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.