இன்று(மே 22) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹாசன் முதலிடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக தனது முதல் இடத்தை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானிடம் இழந்திருந்தார் ஷகிப்.
சமீபத்தில் அயர்லாந்தில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடருக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள ஓடிஐ தரவரிசையில் ஷகிப் அல் ஹாசன் ஓடிஐ கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். வங்கதேச அணியின் டாப் கிரிக்கெட் வீரரான இவர் டாப் ஆர்டரில் சிறப்பான பேட்டிங் மேற்கொள்வார். தனது சிறப்பான ஆட்டத்தை சீராக வெளிப்படுத்தும் திறமை உடையவராக ஷகிப் அல் ஹாசன் திகழ்கிறார்.
சமீபத்தில் முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 2 அரைசதங்களுடன் 140 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் 359 புள்ளிகளை பெற்று ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துல்லார் ஷகிப் அல் ஹாசன். உலகக் கோப்பைக்கு முன் ஷகிப் அல் ஹாசனின் இந்த முன்னேற்றம் அவருக்கு அதிக நம்பிக்கையை அளித்திருக்கும்.
தற்போது ரஷீத் கான் ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது மூத்த வீரர் மற்றும் 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் சக வீரர் முகமது நபி மூன்றாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் இமாட் வாஷிம் ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.
அதைத் தொடர்ந்து 5வது மற்றும் 6வது இடங்களில் மிட்செல் சான்ட்னர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரின் மூலம் நான்கு இடங்கள் முன்னேறி உள்ளார். உலகக் கோப்பையில் விளையாட சமீபத்தில் உடற்தகுதி பெற்ற பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஜ் ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளார்.
அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் கீழ்முகம் கண்டு 8வது இடத்தில் உள்ளார். இருப்பினும் இந்த தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜேஸன் ஹோல்டர் திகழ்கிறார். 9வது இடத்தில் ஜீம்பாப்வே-வைச் சேர்ந்த ஷீகாந்தர் ரஜா உள்ளார். கடந்த முறை 9 இடத்தில் இருந்த ஆன்ஜீலோ மேதீவ்ஸ் 10வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணியின் சிறப்பான ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 11வது இடத்தை வகிக்கிறார். 12, 13, 14வது இடங்களில் 242 புள்ளிகளை பெற்று தென்னாப்பிரிக்காவின் ஆன்டில் பெஹில்க்வாயோ, இந்தியாவின் கேதார் ஜாதவ், இங்கிலாந்தின் மொய்ன அலி உள்ளனர். கேதார் ஜாதவ் சமீபத்தில்தான் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு உலகக் கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார். 20வது இடத்தில் இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்பாக ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியல் கிரிக்கெட் வீரர்களுக்கு புத்துணர்ச்சியாக அமைய அதிக வாய்ப்புள்ளது.