மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 22ஆம் தேதி வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் நகரத்தில் சாகர் அகமது சௌதிரி மைதானத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி நேற்றைய தினமே முடிவடைந்தது. மொத்தம் மூன்றே நாட்கள் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச கிரிக்கெட் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் உல் ஹசனுக்கு இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 54ஆவது டெஸ்ட் போட்டியாகும். ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் இவர் இந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சாதனை செய்துள்ளார். இந்த சாதனை மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் போத்தம் அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் உல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்களை கடந்த முதல் வங்காளதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தட்டிச்சென்றார். அது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்துள்ளார். குறைந்த டெஸ்ட் (55) போட்டிகளில் விளையாடி 3000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்களை கடந்த இயன் போத்தம் அவர்களின் சாதனையை இப்போது முறியடித்துள்ளார் ஷாகிப் உல் ஹசன் (54).
இந்த டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் கியரன் பவல் விக்கெட்டை ஷாகிப் உல் ஹசன் எடுத்தார். இந்த விக்கெட்டின் மூலம் ஷாகிப் உல் ஹசன் 200 விக்கெட்களை எடுத்த முதல் வங்காளதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தட்டிச்சென்றார்.
ஆறு வருடங்களுக்கு முன்னாள் இதே நாளில் நவம்பர் 24, 2012 அன்று ஷாகிப் உல் ஹசன் தனது 100ஆவது டெஸ்ட் விக்கெட்டை எடுத்திருந்தார் . இதன் மூலம், வங்காளதேச பந்து வீச்சாளர் முகம்மது ரபீக் அவருக்கு அடுத்தபடியாக 100 விக்கெட்களை சாய்த்த இரண்டாவது வங்காளதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இது வரை, ஷாகிப் உல் ஹசன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் பதினெட்டு (18) முறை 5 விக்கெட்களையும், இரண்டு (2) முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 124 ரன்களுக்கு 10 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 137 ரன்கள் அடித்தார்.
கடந்த 2017ஆம் வருடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 153 ரன்கள் விட்டு கொடுத்து 10 விக்கெட்களை கைப்பற்றினர். அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 84 ரன்கள் அடித்தார்.
ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக 10 விக்கெட்களை சாய்த்த இவர் அன்றைய போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்களை கைப்பற்றிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.
ஷாகிப் உல் ஹாசன் (வங்காளதேசம்) - 54
இயன் போத்தம் (இங்கிலாந்து) - 55
கிறிஸ் கெய்ன்ஸ் (நியூஸிலாந்து) - 58
ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் (இங்கிலாந்து) - 69
கபில் தேவ் (இந்தியா) - 73