உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான தவானுக்கு பதில், ரிஷப் பண்டை களமிறக்கலாம் என்று ஷேன் வார்னே கூறியுள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு காண்போம்.
உலகக்கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. தன் தாய் நாட்டிற்காக விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களின் பெரிய ஆசை என்னவென்றால், உலக கோப்பை தொடரில் தன் தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது தான். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலக கோப்பை தொடர் ஆனது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடர் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு நான்கு வருடங்கள் கழித்து, இந்த 2019 ஆம் வருடத்தின் ஜூன் மாதத்தில் 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியில் நிரந்தர தொடக்க ஆட்டக்காரர்களாக திகழ்ந்து வருகின்றனர் ரோகித் சர்மா மற்றும் தவான். அதற்கு காரணம் இவர்களின் சிறப்பான தொடக்கம் தான். தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட கூடிய திறமை படைத்தவர். ரோகித் சர்மா சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி பின்பு பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய திறமை படைத்தவர். இவர்கள் இருவரும் தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்திய அணியின் பல வெற்றிகளில், இவர்களின் சிறப்பான ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அணியின் இந்த சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்களை பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறியது என்னவென்றால், தவானுக்கு பதில் ரிஷப் பண்டை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்பது தான்.
"கடந்த சில மாதங்களாக இந்திய அணி விளையாடி வரும் சர்வதேச போட்டிகளில், தோனி மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரிஷப் பண்டை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்தால், தோனிக்கு திடீரென காயம் ஏற்பட்டால் இவரை மாற்று கீப்பராக பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி ரோகித் சர்மாவுடன், இவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் புது உற்சாகத்தை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி ஒரு வலதுகை பேட்ஸ்மேன், மற்றும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்ற பொருத்தமான ஜோடியாக இருக்கும்".
"தொடக்க ஆட்டக்காரரான தவானை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம். ஆஸ்திரேலிய அணி இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளில், ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பார்க்கலாம். இவ்வாறு செய்வது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்". இவ்வாறு ஷேன் வார்னே கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் டி-20 போட்டி இந்த மாதத்தின் 24ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.