அடுத்த வருடம் இன்னும் வலிமையாக மீண்டு வருவோம்.!! விசில் போடு !! - 'ஷேன் வாட்சன்' வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ.

Shane Watson Played an Amazing Innings in this IPL Final.
Shane Watson Played an Amazing Innings in this IPL Final.

இந்த வருட ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டிக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அதிலும் குறிப்பாக CSK ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் 'ஷேன் வாட்சன்'. காலில் காயம் பட்டு ரத்தம் சொட்ட சொட்ட 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய இவரது அர்ப்பணிப்பு ரசிகர்களிடையே இவருக்கு இருந்த மதிப்பை இன்னும் பல படி மேலே உயர்த்தியது.

இந்த வருட ஐபிஎல் கோப்பையை 'மும்பை இந்தியன்ஸ்' அணி வென்றாலும் அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றது 'ஷேன் வாட்சன்' மட்டுமே. தன்னுடைய காயத்தை யாரிடமும் வெளியில் சொல்லாமல் இறுதி வரை மறைத்து (ஹர்பஜன் சிங் மூலமாகத்தான் இது தெரிய வந்தது) இவர் இறுதிப் போட்டியில் ஆடிய அந்த இன்னிங்ஸ் தமிழ்நாட்டு ரசிகர்களை நெகிழச் செய்தது. 59 பந்துகளில் 80 ரன்களை சேர்த்து CSK அணியின் வெற்றிக்காக தனிநபராக போராடினார் வாட்சன்.

இவரது இந்த அற்புத ஆட்டத்தில் CSK அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வி அடைந்தது. ஆனாலும் ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் ஆதரவையும் 'வாட்சனுக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தனர். 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி கூட சமீபத்தில் "எங்களுக்கு ஐபிஎல் கப் கிடைக்காதது கூட பரவாயில்லை. வாட்சனுடைய 'முழங்கால் கேப்' (Knee Cap) தான் எங்களுக்கு கப்" என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்திருந்தது.

https://twitter.com/ChennaiIPL/status/1128920632069042178?s=19

சமீபத்தில் வாட்சன் ஐபிஎல் முடிந்து புறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அவர் நொண்டி நொண்டி செல்வதை பார்த்து CSK ரசிகர்கள் இன்னும் கலங்கிப் போயினர். ரசிகர்களின் இந்த அன்பு மற்றும் ஆதரவு மழையில் நனைந்த வாட்சன் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்தார்.

இந்நிலையில் 'ஷேன் வாட்சன்' சென்னை ரசிகர்களுக்காக தனது 'இன்ஸ்டாகரம்' சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'கடந்த 3 நாட்களாக நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வீடியோ' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் பேசும் 'ஷேன் வாட்சன்' கூறுவது,

" எல்லோருக்கும் ஹாய். கடந்த இரண்டு நாட்களாக நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கும், ஆதரவிற்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. 'மும்பை இந்தியன்ஸ்' அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் சென்றும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. ஆனால் அது மிகச் சிறப்பான ஒரு இறுதிப்போட்டி. மீதி இருக்கும் அந்த ஒரு அடியையும் எடுத்து வைக்க அடுத்த வருடம் மீண்டும் வருவேன். உங்களது ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. விசில் போடு.!! "

ஷேன் வாட்சனின் இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. அடுத்த வருடமும் ஷேன் வாட்சன் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்காக விளையாட போவதாக அறிவித்துள்ளது CSK ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Quick Links

App download animated image Get the free App now