உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பை எட்ட தொடங்கிவிட்டன. இந்த உலக கோப்பை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என பல நிபுணர்கள் கூறிய நிலையில், முதல் நான்கு போட்டிகள் எந்த சுவாரஸ்யமும் இன்றி ஒரு பக்க சார்பாகவே முடிந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு போட்டிகள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன. நேற்று நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில், எளிதாக வெற்றி பெறும் என நினைத்த இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
இதுவரை, 300 மேல் ரன்கள் அடித்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆசிய அணிகள் 130 ரண்களுக்குள் சுருண்டு விட்டன. மற்றொரு ஆசிய அணி பெரும் பாடுபட்டு 200 ரன்னை தாண்டியது. இங்கிலாந்து பிட்சுகள் எல்லாம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறிய நிலையில், இதுவரை நடந்த போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் முத்திரை பதித்துள்ளனர்.
குறிப்பாக மேற்கு இந்திய திவுகள் விளையாடிய டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம் வேகப் பந்துவீச்சிற்கு அற்புதமாக ஒத்துழைத்தது. இதனால் பவுன்சர்களக வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தினறடித்தனர் மேற்கு இந்திய தீவு பவுலர்கள். இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய கார்டிஃப் மைதானம் ஸ்விங்கிற்கு ஒத்துழைத்தது. இதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையை துவம்சம் செய்தனர்..
இந்தப் போட்டிகளை வைத்து பார்க்கும் போது, நாளை தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக விளையாடப் போகும் இந்திய அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளரை சேர்ப்பது மோசமான முடிவு இல்லை என்று தான் தோன்றுகிறது. மற்ற அணிகள் எல்லாம் தங்களது இரண்டாவது, மூன்றாவது போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில், இப்போது தான் இந்தியா முதல் போட்டியே விளையாடப் போகிறது.
ஆகவே புவனேஷ்வர் குமார், முஹமது ஷமி, பும்ரா ஆகியரோடு ஹர்திக் பண்டியாவையும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் விராத் கோலி பயன்படுத்த வாய்ப்புள்ளது. பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் முதல் பத்து ஓவர்களில் முக்கிய பங்காற்றுவார்கள். மிடில் ஓவர்களில் ஷமி விக்கெட் எடுத்துக் கொடுப்பார். இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், குல்தீப் அல்லது சஹால் இருவரில் யாராவது ஒருவரே அணியில் இடம் பெற முடியும்.
நடந்து முடிந்த முதல் ஐந்து போட்டிகளில் 68 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் வேகப் பந்துவீச்சாளர்கள் மடுமே 51 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து பிட்சுகள் வேகப் பந்துவீச்சிற்கு உதவி புரிகின்றன என்பது இதிலிருந்து தெரிகிறது. இதுவரை சுழற் பந்துவீச்சாளர்கள் பக்கவாத்தியமாகவே செயல்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் போது பிட்ச்சில் எந்தவிதமான பந்தை அதிகளவில் வீசப் போகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பும்ராவும் ஷமியும் நன்றாக பவுன்சர்கள் மற்றும் ஷார்ட் பால் போடக் கூடியவர்கள். புவனேஷ்வர் குமார் பற்றி சொல்லவே வேண்டாம். இங்கிலாந்து பிட்ச் என்றல் அவரது பந்து தானாக ஸ்விங் ஆகும். பிட்ச்சின் தன்மைக்கேற்ப இவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதில் தான் இந்தியாவின் வெற்றி அடங்கியுள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியாக தென் ஆப்ரிக்கா அணியை நாளை எதிர்கொள்கிறது. போட்டி நாளை மாலை இந்திய நேரப்படி மூன்று மணிக்கு ஆரம்பமாகும்.